உள்ளூர் செய்திகள்

மலை கிராமங்களில் ஆழ்துளை கிணறு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் சாலை மறியல்

Published On 2024-03-22 09:32 GMT   |   Update On 2024-03-22 09:32 GMT
  • தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி. சாந்தி, போலீஸ் இன்ஸ்பெக்டர் தவமணி மற்றும் போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்தனர்.
  • மறியலால், பெட்டமுகிலாளம் சாலையில் 1½ மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தேன்கனிக்கோட்டை:

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே பெட்டமுகிலளாம் மலைபகுதி, கடல் மட்டத்தில் இருந்து ஆயிரம் அடி உயரமான மலை கிராமம் என்பதால், பெங்களூருவைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர்கள் அப்பகுதியில் நிலங்களை விலைக்கு வாங்கி ரிசார்ட்டுகள், ஓட்டல்கள், தங்கும் விடுதிகள் கட்டியுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கடந்த ஆண்டு போதிய மழை பெய்யாததால், தேன்கனிக்கோட்டை அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

நிலத்தடி நீர்மட்டம் ஆயிரம் அடிக்கு கீழே சென்று விட்டது. விவசாயிகள் தங்கள் நிலங்களில், ஆயிரம் அடிவரை அழ்துளை கிணறு அமைத்தும், தண்ணீர் கிடைப்பதில்லை.

இந்நிலையில், பெட்டமுகிலாளம் மலை பகுதி, காவேரி வடக்கு உயிரின சரணாலய பகுதியாக உள்ளதால், மண் வளம், வன உயிரினங்களை பாதுகாக்க, ஆழ்துளை கிணறு அமைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால், பெட்டமுகிலாளம் மலை பகுதிக்கு உட்பட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதோடு, பயிர்கள் கருகி பாதிக்கப்பட்டுள்ளது.

புதிதாக ஆழ்துளை கிணறு அமைக்க முடியாததால், பாதிக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள், நேற்று அய்யூர்- பெட்ட முகிலாளம் சாலையில் உள்ள வனத்துறை விடுதி அருகே, அரசு டவுன் பஸ்சை மறித்து சாலை மறியல் செய்தனர். மேலும், அவர்கள் பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாகவும் கோஷங்களை எழுப்பினர்.

இது குறித்து தகவல் அறிந்த, தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி. சாந்தி, போலீஸ் இன்ஸ்பெக்டர் தவமணி மற்றும் போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்தனர். இதையடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர்.

இந்த மறியலால், பெட்டமுகிலாளம் சாலையில் 1½ மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News