சீர்காழியில் வரலாறு காணாத மழை- ஆயிரம் கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது
- பொதுமக்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
- சீர்காழியில் மட்டும் 9 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டன. மொத்தம் இதுவரை 32 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.
சீர்காழி:
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தில் வரலாறு காணாத அளவில் கனமழை கொட்டி வருகிறது.
திரும்பிய திசையெல்லாம் வெள்ளக்காடாக காட்சி அளிக்கும் சீர்காழி குட்டி தீவு போல மாறியுள்ளது.
குறிப்பாக சீர்காழி, வைத்தீஸ்வரன்கோவில், திருமுல்லைவாசல், சூரைக்காடு, கொள்ளிடம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் மிக அதிக கனமழை பெய்தது. இதில் சீர்காழியில் மட்டும் 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஒரே நாளில் குறிப்பாக 6 மணி நேரத்தில் 44 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது.
இந்த அதீத கனமழையால் சீர்காழியில் இதுவரை தண்ணீர் தேங்காத குடியிருப்புகளிலும் தண்ணீர் புகுந்தது. இது தவிர வைத்தீஸ்வரன்கோவில் உள்பட 30-க்கும் மேற்பட்ட பகுதிகளில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்தது. மேலும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்கியது. சுமார் 1000-க்கும் மேற்பட்ட கிராமங்களை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
மேலும் சீர்காழி அருகே சூரைக்காடு உப்பனாற்றில் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டதால் கரையோரத்தில் உள்ள 350 வீடுகள் வெள்ளத்தில் பெருமளவு மூழ்கியது. இதனால் அங்கு தங்கியிருந்த பொதுமக்கள் உயிர் பயத்தில் உடமைகளை கூட எடுக்காமல் வெளியேறினர்.
இப்படி பல வீடுகள் கனமழையால் வெள்ளத்தில் மூழ்கியது. மொத்தம் சீர்காழி மற்றும் அதனை சுற்றியுள்ள 32 கிராமங்கள் வரலாறு காணாத வகையில் பெய்த அதி கனமழையால் முற்றிலும் பாதிக்கப்பட்டன. 4 அடி உயரத்துக்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
குடியிருப்புகள் மட்டுமின்றி கோவில்களிலும் மழைநீர் புகுந்துள்ளது. சீர்காழி சட்டநாதர் கோவில், திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில், வைத்தீஸ்வரன்கோவில் தையல்நாயகி அம்மன் உடனுறை வைத்தியநாதசாமி கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலும் மழைநீர் புகுந்துள்ளது.
சீர்காழி அருகே திருமுல்லைவாசல் பழையார் கடற்கரை சாலையில் தொடுவாய் என்ற இடத்தில் பாலம் உள்வாங்கியதால் சாலைகள் துண்டிக்கப்பட்டன. அப்போது பால் ஏற்றி சென்ற வேன் பாலத்தின் நடுவே பள்ளத்தில் சிக்கி கொண்டது. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
இப்படி புரட்டி போட்ட கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கியது.
பொதுமக்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. சீர்காழியில் மட்டும் 9 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டன. மொத்தம் இதுவரை 32 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 7,156 குடும்பங்களை சேர்ந்த 16 ஆயிரத்து 577 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
சீர்காழி பகுதிகளில் மீண்டும் இரவில் இருந்து மழை பெய்ய தொடங்கி உள்ளது. இரவு முழுவதும் விட்டு விட்டு மழை பெய்தது. இன்று காலையில் இருந்து மீண்டும் கனமழை பெய்ய தொடங்கி உள்ளது.
இதனால் தேங்கிய வெள்ளநீர் வடியாத சூழல் நிலவுகிறது. மேலும் தேங்கி கிடக்கும் தண்ணீரின் அளவு அதிகரித்து வருகிறது. கூடுதலாக வீடுகள் பாதிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. தொடர்ந்து குறைந்தது 1 வாரத்திற்காவது மழை நின்றால் தான் வெள்ளநீர் வடியும் என்ற நிலை உள்ளது. ஆனால் அதற்கான வழி இல்லாமல் மழை பெய்து வருவதால் பொது மக்கள் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வருகின்றனர்.
கனமழையால் மயிலாடுதுறை மாவட்டத்தில் வயல்வெளிகளில் தண்ணீர் புகுந்து தேங்கி கடல்போல் காட்சியளிக்கிறது. போதிய வடிகால் வசதி இல்லாததால் தண்ணீரை வெளியேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கனமழையால் மாவட்டத்தில் 70 ஆயிரம் ஏக்கரில் சம்பா இளம் பயிர்கள் நீரில் முழுமையாக மூழ்கி உள்ளன.
வயல்வெளிகளில் சுமார் 6 அடி உயரத்திற்கு மழை நீர் தேங்கியுள்ளது. அந்த பயிர்களை காப்பாற்ற வேண்டுமென்றால் மழை நின்று தண்ணீரை வெளியேற்றினால் தான் முடியும் என்ற நிலை உள்ளது. ஆனால் தொடர்ந்து பெய்யும் கனமழையால் அதற்கான சாத்தியக்கூறு இல்லை என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் திருமுல்லைவாசல் பகுதியில் பலத்த சூறாவளியுடன் கனமழை பெய்தது. இதனால் கடற்கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 விசைப்படகுகள் மற்றும் 6 பைபர் படகுகள் ஒன்றோடென்று மோதி கடலில் மூழ்கியது.
இது தவிர சீர்காழி பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் பல இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்து உள்ளது. மேலும் மின் கம்பிகள் அறுந்து விழுந்துள்ளன. இதனால் சீர்காழி, திருமுல்லைவாசல் மற்றும் அதனை சுற்றியுள்ள 70 கிராமங்களில் மின் வினியோகம் துண்டிக்கப்பட்டது. இதில் சீர்காழி நகரில் மட்டும் நேற்று இரவு மின் வினியோகம் வழங்கப்பட்டது. மற்ற இடங்களில் மின் விநியோகம் வழங்கப்படவில்லை.
இடைவிடாது பெய்து வரும் அதி கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கியது மட்டுமின்றி வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டு உள்ளது. ஏராளமான வீடுகள் இடிந்துள்ளன. பயிர்கள் கடுமையான சேதம் அடைந்துள்ளது. எனவே மயிலாடுதுறை மாவட்டத்தை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க வேண்டும்.
பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். உயர் அதிகாரிகளை அனுப்பி விரைந்து இந்த பணிகளை தொடங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகாவில் கடந்த ஒரு வார காலமாக பெய்து வரும் கனமழை காரணமாகவும் ஒரே நாளில் 18 சென்டிமீட்டர் மழை பெய்ததாலும் ஆக்கூர் உடையார்கோவில், புத்தூர்ரோடு, சின்ன தெரு, பெரிய தெரு ஆகிய வீதிகளில் உள்ள சாலைகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகள் மழைநீரால் சூழ்ந்துள்ளது.
இப்பகுதியில் உள்ள வாய்க்கால்கள் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ளதால் தண்ணீர் வடிய வழியின்றி விளைநிலங்களில் புகுந்து சாலைகளை கடந்து காட்டாற்று வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. நீர் நிலைகளில் தேங்கியுள்ள ஆகாயதாமரை செடிகளால் தண்ணீர் செல்ல வழியின்றி சாலைகளை ஆக்கிரமித்துள்ளது. இதனால் இப்பகுதியில் உள்ள 70-க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளது.
இதில், பத்துக்கும் மேற்பட்ட கூரை வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளது.