ரெயில் நிலைய பெயர் பலகையில் இந்தி வாசகம் அழிப்பு
- சென்னை கோட்டை புறநகர் ரெயில் நிலைய பெயர் பலகையில் இந்தி வாசகம் கருப்பு மையால் அழிக்கப்பட்டுள்ளது.
- ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை:
தமிழ்நாட்டின் ஆவின் மற்றும் கர்நாடகாவின் நந்தினி தயிர் பாக்கெட்டுகளில், இந்தி வார்த்தையான 'தஹி' என அச்சிட வேண்டும் எனவும், தமிழில் 'தயிர்' கன்னடத்தில் 'மோசரு' போன்ற வார்த்தைகளை அடைப்பு குறிக்குள் பயன்படுத்தலாம் எனவும் மத்திய அரசின் உணவுப் பாதுகாப்பு தரக்கட்டுப்பாட்டு ஆணையம் கடிதம் எழுதி இருந்தது.
இந்த அறிவுறுத்தல் தென்மாநிலங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது மத்திய அரசின் இந்தி திணிப்பு முயற்சி என சமூக வலைத்தளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து ஆவின் தயிர் பாக்கெட்டுகளில் 'தஹி' என அச்சிடப்படாது என பால்வளத்துறை அமைச்சர் நாசர் விளக்கம் அளித்தார்.
இந்நிலையில், சென்னை கோட்டை புறநகர் ரெயில் நிலைய பெயர் பலகையில் இந்தி வாசகம் கருப்பு மையால் அழிக்கப்பட்டுள்ளது.
பெயர் பலகையில் இந்தி எழுத்துக்களை கருப்பு மையால் அழித்த விவகாரம் தொடர்பாக ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.