புதியம்புத்தூரில் சென்னை நர்சு வீட்டில் ரூ.8 லட்சம் நகை கொள்ளை
- கடந்த 4-ந் தேதி புதியம்புத்தூர் வண்டிமறிச்சி அம்மன் கோவில் கொடை விழா நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக கனிராஜ் குடும்பத்துடன் தூத்துக்குடி வந்தார்.
- கொடை விழா முடிந்ததும் மாலதி அணிந்திருந்த 22 பவுன் நகையை வங்கி லாக்கரில் வைப்பதற்காக சென்றனர்.
புதியம்புத்தூர்:
தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் அருகே உள்ள நீராவி மேடு 3-வது தெருவை சேர்ந்தவர் கனிராஜ் (வயது 37), முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி மாலதி.
இவர் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் ஸ்டாப் நர்சாக பணியாற்றி வருகிறார். இதற்காக கனிராஜ் புதியம்புத்தூரில் இருந்து சென்னைக்கு குடி புகுந்தார்.
தற்போது அவர் பெரம்பூர் மடுமா நகர் சின்னக்குழந்தை 2-வது தெருவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
கடந்த 4-ந் தேதி புதியம்புத்தூர் வண்டிமறிச்சி அம்மன் கோவில் கொடை விழா நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக கனிராஜ் குடும்பத்துடன் தூத்துக்குடி வந்தார்.
கொடை விழா முடிந்ததும் மாலதி அணிந்திருந்த 22 பவுன் நகையை வங்கி லாக்கரில் வைப்பதற்காக சென்றனர்.
ஆனால் வங்கி நேரம் முடிந்துவிட்டதால் லாக்கரில் வைக்க முடியவில்லை. இதனால் அவர்கள் புதியம்புத்தூரில் உள்ள வீட்டின் பீரோவில் நகைகளை வைத்துவிட்டு மீண்டும் சென்னை சென்றனர்.
இந்நிலையில் அவரது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதுகுறித்து உறவினர் ஒருவர் சென்னையில் உள்ள கனிராஜூக்கு தகவல் தெரிவித்தார்.
உடனடியாக அவர் புதியம்புத்தூர் விரைந்து வந்தார். அவர் வீட்டில் சென்று பார்த்த போது அங்கு வைக்கப்பட்டிருந்த ரூ.8 லட்சம் மதிப்புள்ள 22 பவுன் நகைகள் கொள்ளை போய் இருந்தது.
இதுதொடர்பாக இன்ஸ்பெக்டர் சண்முகம், சப்-இன்ஸ்பெக்டர் பாலன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்களை தேடி வருகின்றனர்.