தமிழகத்தில் கோவில்களில் நாளை சமபந்தி விருந்து- அமைச்சர்கள் பங்கேற்கிறார்கள்
- சிக்கனமான முறையில் சாதி, சமய ஏற்றத்தாழ்வுகள் இன்றி சிறப்பு வழிபாடு மற்றும் விருந்து நடைபெற வேண்டும்.
- சமபந்தி விருந்துக்கு தயாரிக்கப்படும் உணவு வகைகள் மற்றும் குடிநீர் போன்றவை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருப்பதை கோவில் செயல் அலுவலர் உறுதி செய்ய வேண்டும்.
சென்னை:
சுதந்திர தின விழாவையொட்டி இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களில் சமபந்தி விருந்து நடைபெறுகிறது.
இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ரேணுகா தேவி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சுதந்திர தின விழாவையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்களில் நாளை (15-ந்தேதி) சமபந்தி விருந்து நடைபெறுகிறது. இந்த சமபந்தி விருந்துக்கு அமைச்சர்கள் மற்றும் முக்கிய தலைவர்களுடன் ஆதிதிராவிட மக்களும் கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
சிக்கனமான முறையில் சாதி, சமய ஏற்றத்தாழ்வுகள் இன்றி சிறப்பு வழிபாடு மற்றும் விருந்து நடைபெற வேண்டும். சமபந்தி விருந்துக்கு தயாரிக்கப்படும் உணவு வகைகள் மற்றும் குடிநீர் போன்றவை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருப்பதை கோவில் செயல் அலுவலர் உறுதி செய்ய வேண்டும்.
அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அலுவலகங்களில் சுதந்திர தினவிழாவையொட்டி நாளை (15-ந்தேதி) தேசியக்கொடி ஏற்றும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள கோவில்களில் நாளை நடைபெறும் சமபந்தி விருந்தில் அமைச்சர்களும் பங்கேற்கிறார்கள்.
சென்னை திருவல்லிக்கேணி பார்த்த சாரதி கோவிலில் நடைபெறும் சமபந்தி விருந்தில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு பங்கேற்கிறார். வேளச்சேரி தண்டீஸ்வரம் கோவிலில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோவிலில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் அமைச்சர் பெரியசாமி, வடபழனி முருகன் கோவிலில் அமைச்சர் தங்கம் தென்னரசு, பாரிமுனை காளிகாம்பாள் கோவிலில் அமைச்சர் பெரிய கருப்பன் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.
மயிலாப்பூர் முண்டக கண்ணியம்மன் கோவிலில் அமைச்சர் ராமச்சந்திரன், திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோவிலில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், தேவராஜமுதலி தெரு சென்னை மல்லீஸ்வரர் கோவிலில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் சமபந்தி விருந்தில் கலந்து கொள்கிறார்கள்.