தமிழ்நாடு

திமுக அரசின் மக்கள் விரோத அணுகுமுறையை கண்டித்து வரும் 20-ந்தேதி பாஜக போராட்டம்- அண்ணாமலை

Published On 2025-01-11 12:08 IST   |   Update On 2025-01-11 12:08:00 IST
  • தமிழக அரசு வெறும் 74.87 ஹெக்டேர் நிலத்தை மட்டுமே கையகப்படுத்தியுள்ளது.
  • திமுக அரசின் நத்தை வேகச் செயல்பாடு, இப்போது அருப்புக்கோட்டை மக்களின் பொருளாதார வளர்ச்சிக்குப் பெரும் தடையாக மாறியுள்ளது.

சென்னை:

பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பிரதமர் மோடி அவர்கள், வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கி, நாட்டை வளர்ச்சிப் பாதையில் முன்னோக்கிக் கொண்டு செல்லும் சிறப்பான செயல்பாடுகளை மேற்கொண்டிருக்கையில், இங்குள்ள திமுக அரசு, தமிழகத்தைப் பின்னோக்கி இழுத்துச் செல்கிறது.

மதுரை, தூத்துக்குடி இடையே, அருப்புக்கோட்டை வழியாக புதிய ரெயில் பாதை அமைக்கும் திட்டம் திமுக அரசின் எதிர்ப்பின் காரணமாகக் கைவிடப்பட்டுள்ளதை, ரெயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் நேற்று ஊடகங்களில் தெளிவுபடுத்தினார்.

தமிழகத்தின் பல்வேறு ரெயில் திட்டங்களுக்குத் தேவையான 3,389 ஹெக்டேர் நிலத்தில், வெறும் 26% நிலம் மட்டுமே, திமுக அரசால் கையகப்படுத்தப்பட்டுள்ளதை, சமீபத்தில் நமது ரெயில்வே அமைச்சர் அவர்கள் கூறியிருந்தார்.

அருப்புக்கோட்டை வழியாகச் செல்லும் மதுரை-தூத்துக்குடி புதிய ரெயில் பாதைக்கு, சுமார் 870.98 ஹெக்டேர் நிலம் தேவைப்பட்டது, ஆனால் தமிழக அரசு வெறும் 74.87 ஹெக்டேர் நிலத்தை மட்டுமே கையகப்படுத்தியுள்ளது. திமுக அரசின் நத்தை வேகச் செயல்பாடு, இப்போது அருப்புக்கோட்டை மக்களின் பொருளாதார வளர்ச்சிக்குப் பெரும் தடையாக மாறியுள்ளது.

திமுக அரசின் இந்த மக்கள் விரோத அணுகுமுறையை, தமிழக பாஜக சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறோம். வரும் ஜனவரி 20-ந்தேதி அன்று, அருப்புக்கோட்டை நகரில், புதிய ரெயில் பாதையை ரத்து செய்த திமுக அரசின் முடிவுக்கு எதிராக, விருதுநகர் மாவட்ட மக்களுடன் இணைந்து, மாபெரும் போராட்டம் நடத்தவிருக்கிறோம்.

இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார். 

Tags:    

Similar News