உள்ளூர் செய்திகள்

தமிழ்நாடு, தமிழகம் என்பதற்கு எந்த வேறுபாடும் இல்லை: திருமாவளவன்

Published On 2023-01-09 01:47 GMT   |   Update On 2023-01-09 01:47 GMT
  • தாய் என்றாலும், அம்மா என்றாலும் ஒரே பொருள்தான்.
  • கலாசாரம் நமக்கு உற்சாகத்தை கொடுக்கும்.

நெல்லை :

நெல்லை பாளையங்கோட்டை சேவியர் கல்லூரியில் மக்கள் குடியுரிமை பாதுகாப்பு இயக்கம் சார்பில் பொருநை நல்லிணக்க பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாடு, தமிழகம் என்பதற்கு எந்த வேறுபாடும் இல்லை. தாய் என்றாலும், அம்மா என்றாலும் ஒரே பொருள்தான். தமிழகம், தமிழ்நாடு என்பது சொல் விளையாட்டு அல்ல. இதில் சூசகமும், அரசியலும், சூழ்ச்சியும் உள்ளது. பிரதேசம் என்றாலும், ராஷ்டரியம் என்றாலும் நாடு என்றுதான் பொருள். இந்த தேசத்திற்கு இந்து ராஷ்டிரம் என பெயர் சூட்ட நினைக்கிறார்கள்.

மகாராஷ்டிரம் என்று சொல்லக்கூடாது, பாரதம் என்றுதான் சொல்ல வேண்டும் என சொல்வதற்கு அவர்களுக்கு தைரியம் உண்டா?. கலாசாரம் நமக்கு உற்சாகத்தை கொடுக்கும்.

பண்டிகைகள் ஆட்டம், பாட்டம், கூத்து கொண்டாட்டம் என இழுத்துச்செல்லும். சடங்கு சம்பிரதாயங்கள் நம்மை சிந்திக்கவிடாமல் மயக்கும் மாயையை உருவாக்கும்.

கல்வி, சுகாதாரத்தை, மருத்துவத்தை தந்தது கிறிஸ்தவம். இந்த மண்ணில் கிறிஸ்தவத்தின் வருகைக்கு பின்தான் சேரிகளுக்குள்ளும், குப்பங்களுக்குள்ளும், குக்கிராமங்களுக்குள்ளும் வெளிச்சம் பரவியது என்பதை யாரும் மறுக்க முடியாது. கிறிஸ்தவத்தை ஆதரிக்க வேண்டும் என்பதற்கோ, பெருமைப்படுத்த வேண்டும் என்பதற்கோ இப்படி பேசவில்லை. உண்மையை பேச வேண்டும், வரலாற்றை பேச வேண்டும் என்பதற்காகவே இப்படி பேசுகிறேன்.

அரசு பள்ளிகளில் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும், சிறுபான்மையினரால் நடத்தப்படும் பள்ளிகளிலும் செயல்படுத்தப்பட வேண்டும்.

அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியமர்த்தப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கான பணி ஒப்புகை அரசாணையை உடனடியாக வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் பப்புவா நியூகினியா நாட்டின் கவர்னர் சசீந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அதனைத்தொடர்ந்து தப்பாட்டம், ஒயிலாட்டம், நையாண்டி மேளம், கரகாட்டம், கொக்கரையாட்டம், பொய்க்கால் குதிரை உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடந்தது.

Tags:    

Similar News