மனித நேயம் மட்டும்தான் நமது கலாச்சாரத்தின் அடிப்படை- சாமிதோப்பில் கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு
- அதர்மத்திற்கு எதிராக யாரெல்லாம் குரல் கொடுக்கிறார்களோ அவர்களெல்லாம் கடவுள் என்று அய்யா வைகுண்டர் கூறியுள்ளார்.
- சாதி, இனம் மதத்திற்கு அப்பாற்பட்ட அனைத்து மனிதர்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.
தென்தாமரைகுளம்:
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று மாலை கன்னியாகுமரி வந்தார். கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் தரிசனம் செய்த கவர்னர் ஆர் என்.ரவி நேற்றிரவு கன்னியாகுமரியில் தங்கினார்.
இன்று காலை சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமை பதிக்கு சென்று தரிசனம் செய்தார். தரிசனம் முடிந்த பின்னர் கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது:-
துரதிஷ்டவசமாக நமது சமூகத்தில் தவறான சில பழக்க வழக்கங்கள் இருந்தது. அய்யாவின் போதனைகளை மக்கள் தங்களது வாழ்வியலில் கடைபிடிக்க வேண்டும். அப்போதுதான் சமதர்ம சமநிலையை அடைய முடியும். மனிதநேயம் மட்டும் தான் நமது கலாச்சாரத்தின் அடிப்படை.
அய்யா வைகுண்டர் ஒரு தெய்வீக ஆத்மா. பாரதம் எனும் பாரம்பரிய வழி வந்தவர். எப்போதெல்லாம் தர்மம் விழுகிறதோ அப்போதெல்லாம் மனித உருவில் கடவுள் அவதரிப்பார். அதர்மத்தை ஒழிப்பதற்காக அவதாரம் எடுத்தவர் அய்யா வைகுண்டர்.
சமூகத்தில் ஏற்றத்தாழ்வு, தீண்டாமை போன்ற பல தீய பழக்கங்கள் இருந்தது. இது வெட்கக்கேடான விஷயம். பின்னர் பிரிட்டிஷாரால் நாம் காலனி ஆதிக்கத்திற்கு உட்படுத்தப்பட்டோம்.
மனிதநேயம் மட்டும் தான் நமது கலாச்சாரத்தின் அடிப்படை. அதர்மத்திற்கு எதிராக யாரெல்லாம் குரல் கொடுக்கிறார்களோ அவர்களெல்லாம் கடவுள் என்று அய்யா வைகுண்டர் கூறியுள்ளார்.
சாதி, இனம் மதத்திற்கு அப்பாற்பட்ட அனைத்து மனிதர்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களும் இதில் ஒரு அங்கம் தான்.
அய்யாவின் போதனைகளை மக்கள் தங்களது வாழ்வியலில் கடைபிடிக்க வேண்டும். அப்போதுதான் சமதர்ம சமநிலையை அடைய முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
சாமி தோப்பு சென்ற கவர்னர் ஆர்.என்.ரவி அய்யாவழி வழக்கப்படி தலைப்பாகை அணிந்து கோவிலுக்கு சென்றார். அவரை சாமிதோப்பு தலைமை பதி நிர்வாகி பால ஜனாதிபதி, பால லோகாதிபதி ஆகியோர் வரவேற்றனர். கவர்னர் வருகையையொட்டி சாமிதோப்பில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.