போதை காளானில் தேன் ஊற்றி ருசித்த வாலிபர்: வீடியோ சமூக வலைதளத்தில் வைரல்
- போதை காளான் விற்பனை அதிகரித்து வருகிறது.
- சிறப்புக்குழு அமைத்து கடும் நடவடிக்கை.
கொடைக்கானல்:
சர்வதேச சுற்றுலா தலமான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இதில் வாலிபர்கள், கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதை காளான் மற்றும் கஞ்சா அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தி இவர்களை பிடித்து நடவடிக்கை எடுத்த போதும் தொடர்ந்து கஞ்சா மற்றும் போதை காளான் விற்பனை அதிகரித்து வருகிறது.
கொடைக்கானல் நகர் பகுதி மட்டுமின்றி மேல்மலை கிராமங்களான பூண்டி, மன்னவனூர், கூக்கால் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் கஞ்சா, போதை காளான் விற்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
மலை கிராமங்களில் தங்கும் விடுதிகளில் போதைப்பொருள் பயன்படுத்தப் பட்டதாக எழுந்த புகாரையடுத்து அதிகாரிகள் சோதனை நடத்தி தங்கும் விடுதிக்கு சீல் வைத்தனர்.
இந்த நிலையில் மேல்மலை கிராம பகுதியில் ஒரு வாலிபர் போதை காளானை பறித்து அதில் தேன் ஊற்றி ருசிப்பது போன்ற காட்சிகள் அடங்கிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதில் சிலர் போதை காளானை எவ்வாறு பயன்படுத்துவது, எந்த பகுதியில் அதிகமாக கிடைக்கும் எனவும் சிலர் கருத்து பதிவிட்டுள்ளனர்.
போதை காளான், கஞ்சா விற்பனையில் கும்பல் தீவிரமாக இயங்கி வருகிறது. கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இந்த பழக்கத்திற்கு அடிமையாகி தங்கள் வாழ்வை தொலைத்து வருகின்றனர்.
எனவே கொடைக்கானல் மலைப்பகுதியில் சிறப்புக்குழு அமைத்து கஞ்சா மற்றும் போதை காளான் விற்பனை செய்யும் கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.