நெல்லையில் பயங்கரம்: ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் சரமாரி வெட்டிக்கொலை
- கருணாநிதியின் தனிப்பிரிவு அதிகாரியாக பணியாற்றியவர்.
- சொத்து தகராறில் கும்பல் வெறிச்செயல்.
நெல்லை:
நெல்லை டவுன் தடிவீரன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜாகீர் உசேன் பிஜிலி (வயது 57). இவர் காவல்துறையில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விருப்ப ஓய்வு பெற்றார்.
அதன்பிறகு இவர் நெல்லை டவுன் முர்த்திம் ஜைக்கான் தைக்காவில் நிர்வாகியாக இருந்து வந்தார். தற்போது ரம்ஜானையொட்டி நோன்பு இருந்து வந்த நிலையில், இன்று அதிகாலை தைக்காவிற்கு தொழுகைக்கு சென்றார்.
பின்னர் தொழுகையை முடித்துவிட்டு அங்கிருந்து சற்று தொலைவில் உள்ள தனது வீட்டுக்கு தெற்கு மவுண்ட்ரோடு வழியாக நடந்து வந்தார்.
அப்போது அவரை பின்தொடர்ந்து ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கும்பல் ஜாகீர் உசேன் பிஜிலியை அரிவாளால் வெட்ட முயன்றுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், அங்கிருந்து தப்பித்து ஓட முயற்சி செய்துள்ளார்.
ஆனால் அதற்குள் மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கிய அந்த கும்பல் ஜாகீர் உசேனை சுற்றி வளைத்து சரமாரி வெட்டிக்கொலை செய்தது.
பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து அந்த கும்பல் தப்பிச்சென்றுவிட்டது. அவ்வழியாக வந்தவர்கள் இதனை பார்த்து டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக இன்ஸ்பெக்டர் கோபால கிருஷ்ணன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்றனர். தகவல் அறிந்து நெல்லை மாநகர் மேற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் கீதா, டவுன் உதவி கமிஷனர் அஜிகுமார் உள்ளிட்டோரும் அங்கு விரைந்து சென்றனர்.
அப்போது முகம் மற்றும் பின் தலை பகுதிகள் சிதைக்கப்பட்ட நிலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில் ஜாகீர் உசேன் பிஜிலி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.
போலீசார் உடலை கைப்பற்றி பிரேதபரி சோதனைக்கு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகள் யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
டவுன் காட்சி மண்டபம் அருகே உள்ள தொட்டிப்பாலம் தெருவை அடுத்த பிரதான சாலையில் 36 சென்ட் இடம் உள்ளது. இந்த இடம் தொடர்பாக ஜாகீர் உசேன் பிஜிலிக்கும், அதே பகுதியை சேர்ந்த இஸ்லாமிய பெண்ணை மணம் முடித்த பட்டியலின பிரமுகர் ஒருவருக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்துள்ளது.
இதுதொடர்பாக அவர்களுக்குள் பிரச்சினை முற்றிய நிலையில் கடந்த ஜனவரி மாதம் ஜாகீர் உசேன் பிஜிலி மீது தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதனால் 2 தரப்பினருக்கும் இடையே மேலும் முன்விரோதம் அதிகரித்த நிலையில், எதிர்தரப்பினர் இந்த கொலை சம்பவத்தை நிகழ்த்தி இருக்கலாமா? அல்லது வேறு ஏதேனும் காரணங்களினால் இந்த கொலை நடந்திருக்கலாமா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய கொலையாளிகளை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட ஜாகீர் உசேன் பிஜிலிக்கு மனைவி, 1 மகன் மற்றும் மகள் உள்ளனர். மகன் திருமணமாகி வெளிநாட்டில் வசித்து வருகிறார்.
நெல்லை மாநகரின் முக்கிய இடத்தில் அதிகாலையில் தொழுகைக்கு சென்று வந்த ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனையொட்டி அசம்பாவிதங்களை தடுக்கும் விதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.