வரலாற்றிலேயே மிகக்குறைந்த எடையில் பிறந்த குழந்தை
- மிகக்குறைந்த எடையில் பிறந்த குழந்தையை காப்பாற்றி அரசு டாக்டா்கள் சாதனை
- அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மிகக்குறைந்த எடையில் பிறந்த குழந்தையை காப்பாற்றி அரசு டாக்டா்கள் சாதனை படைத்துள்ளனர்.
அரியலூர் ,தாமரைக்குளம்:
அரியலூர் மாவட்டம், அங்கனூரை சேர்ந்த ஆனந்தின்(வயது 25) மனைவி சத்தீஸ்வரி. 7 மாத கர்ப்பமாக இருந்த சத்தீஸ்வரிக்கு மருத்துவ பரிசோதனை செய்தபோது, ரத்த அழுத்தம் அதிகமாக இருந்ததை டாக்டர்கள் கண்டறிந்தனர். இதையடுத்து குழந்தையையும், தாயையும் காப்பாற்ற அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதையடுத்து அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கல்லூரி முதல்வர் முத்துகிருஷ்ணன், மருத்துவமனை கண்காணிப்பாளர் ரமேஷ் ஆகியோர் ஆலோசனைப்படி டாக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான குழந்தைகள் நல மருத்துவ குழுவினர் மற்றும் நர்சுகள் சத்தீஸ்வரிக்கு அறுவை சிகிச்சை செய்தனர். இதில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை 750 கிராம் எடையில் மட்டுமே இருந்தது. இதனையடுத்து இங்குபேட்டரில் வைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். தற்போது தாயும், சேயும் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வரலாற்றிலேயே மிகக்குறைந்த எடையிலான குழந்தை இதுவே என்றும், அதனை காப்பற்றியது சாதனை என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர். குழந்தையின் பெற்றோர், டாக்டர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.