திருமாவளவன் நிச்சயம் முதலமைச்சர் ஆவார்-வன்னிஅரசு
- விடுதலை சிறுத்தைகள் ஆட்சியில் அமர வேண்டும்.
- சாதிக்கொடுமை என்ன என்பது நமக்கு மட்டும் தான் தெரியும்.
திருச்செந்தூர்:
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள நாலுமூலைக்கிணறு கிராமத்தில் விடுதலை சிறுத்தைகளின் தேர்தல் அங்கீகார வெற்றி விழா பொதுக்கூட்டம் நடந்தது.
இதில் சிறப்பு விருந்தினராக விடுதலை சிறுத்தைகள் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு கலந்து கொண்டு பேசியதாவது:-
2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வரப்போகிறது. தேர்தல் வரப்போகிறது என்றால் என்ன பொருள்? 2026 தேர்தலில், ஆட்சியிலே அதிகாரத்திலேயே பங்கு பெறக்கூடிய இடத்தில் விடுதலை சிறுத்தைகள் வலிமை பெற வேண்டும். விடுதலை சிறுத்தைகள் ஆட்சி அதிகாரத்திற்கு வர வேண்டும்.
விடுதலை சிறுத்தைகள் ஆட்சியில் அமர வேண்டும். திருமாவளவன் முதலமைச்சராக வர வேண்டும். இதுதான் நமது கனவு. தலைவர் ஒருநாள் நிச்சயம் முதலமைச்சராக வருவார். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.
1990-ம் ஆண்டு தலைவர் விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடியை ஏற்றும் போது இந்த கொடி விரைவில் கோட்டையில் பறக்கும் என்றார். இப்போது நாம் கோட்டைக்கு நமது கொடி கட்டி தான் செல்கிறோம். கோட்டைக்குள் கொடி கட்டிக் கொண்டு செல்லும் இயக்கமாக நமது இயக்கத்தை மாற்றியுள்ளார் நமது தலைவர்.
ஆட்சி அதிகாரத்திற்கு வர வேண்டும் என்பது தான் நமது கனவு என அம்பேத்கர் கூறியுள்ளார். அனைவரையும் இணைத்துச் செல்ல வேண்டும். சாதிக்கொடுமை என்ன என்பது நமக்கு மட்டும் தான் தெரியும்.
இன்று புதிதாக கட்சி ஆரம்பித்து வருகிறார்கள். அவர்களுக்கு எதுவுமே தெரியாது. ஸ்கிரிப்ட் எழுதி கொடுக்க வேண்டும். அதை மனப்பாடம் செய்து விட்டு ஓட்டு கேட்பது போல் நின்று விட்டு சென்று விடுவார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.