உள்ளூர் செய்திகள்

பழனியில் நாளை திருக்கார்த்திகை தீப திருவிழா: தங்கரத புறப்பாடு ரத்து

Published On 2024-12-12 04:15 GMT   |   Update On 2024-12-12 04:15 GMT
  • நாளை 2 மணி முதல் மாலை 6 மணி வரை மலைக்கோவிலுக்கு செல்ல அனுமதி கிடையாது.
  • கோவிலில் 4 திசைகளிலும் தீபங்கள் ஏற்றப்படும்.

பழனி:

முருகப்பெருமானின் 3ம் படை வீடான பழனியில் திருக்கார்த்திகை திருவிழா கடந்த 7-ந் தேதி காப்புகட்டுதலுடன் தொடங்கியது. ஒரு வாரம் நடைபெறும் இவ்விழாவை முன்னிட்டு தினந்தோறும் மாலையில் சண்முகார்ச்சனை, சண்முகர் தீபாராதனை, யாகசாலை, தங்கரதம் புறப்பாடு ஆகியவை நடைபெற்று வந்தன.

6ம் நாளான இன்று சாயரட்சை பூஜையின் போது பரணி தீபம் ஏற்றும் நிகழ்வு நடைபெறுகிறது. அப்போது மூலவர் சன்னதியிலும் கோவிலில் 4 திசைகளிலும் தீபங்கள் ஏற்றப்படும்.

நாளை கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்வு மற்றும் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெறும். இதனை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம், மாலை 4 மணிக்கு சாயரட்சை பூஜை நடைபெறுகிறது.

தொடர்ந்து 4.30 மணியளவில் சின்னக்குமார சுவாமி தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி யாகசாலைக்கு சென்ற பின்பு பரணி தீபத்தில் இருந்து சுடர் பெறப்பட்டு மாலை 6 மணிக்கு கார்த்திகை தீபம் ஏற்றுதலும், சொக்கப்பனை ஏற்றுதலும் நடைபெறும்.

சொக்கப்பனை ஏற்றப்படுவதால் நாளை தங்கரத புறப்பாடு ரத்து செய்யப்படும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் நாளை திருக்கார்த்திகையை முன்னிட்டு பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும். இதனால் நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் நாளை பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை மலைக்கோவிலுக்கு செல்ல அனுமதி கிடையாது. அதன் பிறகு தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

மலைக்கோவிலுக்கு செல்ல யானைப்பாதையையும், கீழே இறங்குவதற்கு படிப்பாதையையும் பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, துணை ஆணையர் வெங்கடேஷ், உதவி ஆணையர் லெட்சுமி உள்ளிட்ட அதிகாரிகள், அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News