சோதனைகளை சாதனையாக்கும் திறன் படைத்தவர்கள் மாணவர்கள் சிக்கண்ணா கல்லூரி முதல்வர் பெருமிதம்
- டிசம்பர் 5-ந் தேதி சர்வதேச தன்னார்வலர்கள் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
- பேரிடர் காலங்களில் அரசுடன் இணைந்து பல்வேறு பணிகளை மக்களுக்காக மேற்கொள்ள வேண்டும் என்று பேசினார்.
திருப்பூர்:
சர்வதேச தன்னார்வலர் தினத்தை முன்னிட்டு திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 சார்பாக கல்லூரி வளாகத்தில் உள்ள குமரன் அரங்கில் நாட்டு நலப்பணித் திட்ட மாணவ மாணவிகளுக்கு சிறந்த தன்னார்வலர் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் வரவேற்புரை ஆற்றினார். சிறப்பு விருந்தினராக கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அவர் பேசியதாவது:- ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 5-ந் தேதி சர்வதேச தன்னார்வலர்கள் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.தன்னார்வ சேவையை செய்யும் அத்துணை பேரும் கவனமாக இருக்க வேண்டும். எவ்வளவு சோதனை வந்தாலும் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் நாட்டிற்காக தங்களை அர்ப்பணித்து எப்போதும் தன்னார்வ சேவையை மேம்படுத்த வேண்டும்.
மாணவர்கள் கல்வியிலும், சேவையிலும் கவனம் செலுத்த வேண்டும். பொய் பேசுவதை தவிர்த்து நேர்மையாக இருக்க வேண்டும். தொற்று நோய்கள் பரவும் நேரத்தில் நோய் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு நடத்துவது, பேரிடர் காலங்களில் அரசுடன் இணைந்து பல்வேறு பணிகளை மக்களுக்காக மேற்கொள்ள வேண்டும் என்று பேசினார்.
பிறகு மாணவ செயலர்கள் சுந்தரம், அருள்குமார், பூபாலன், ராஜபிரபு, விஜய், ஜெயசந்திரன், கருமலையான் ஆகியோர் தலைமையில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர். அதில் 30க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகளுக்கு சிறந்த தன்னார்வலர் விருது வழங்கப்பட்டது. மாணவ மாணவிகள் தங்கள் பெற்றோர்களுடன் வந்து விருதினை பெற்றுக்கொண்டனர்.