மெட்ரோ பணி- எம்.எம். காலனியை 4 மாதத்தில் காலி செய்து கொடுக்க ஐகோர்ட் உத்தரவு
- மாதவரம்- ரெட்டேரி சந்திப்பு இடையே மெட்ரோ ரெயில் பணி வேகமாக நடந்து வருகின்றன.
- மேலும் வரும் மே 31-ந்தேதிக்குள் காலி செய்யவில்லை எனில் அரசு நடவடிக்கை எடுக்கலாம்.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக இரண்டு வழித்தடங்களில் சுமார் 55 கிலோமீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இதை தொடர்ந்து ரூ.63,246 கோடி மதிப்பில் 118 கிலோ மீட்டர் தொலைவுக்கு 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டப்பணி நடைபெறுகிறது.
இந்த திட்டத்தில் கலங்கரை விளக்கம்- பூந்தமல்லி வரை 26.1 கிலோ மீட்டர், மாதவரம்-சோழிங்கநல்லூர் வரை 47 கி.மீ., மாதவரம்-சிறுசேரி சிப்காட் வரை 45.8 கி.மீ. தொலைவுக்கு என 3 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதில் உயர்மட்ட பாதை, சுரங்க பாதையில் ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.
இதில் மாதவரம் பால்பண்ணை- சோழிங்கநல்லூர் ரெயில் பாதை திட்டத்தில் ஒரு பகுதியான மாதவரம்- ரெட்டேரி சந்திப்பு இடையே மெட்ரோ ரெயில் பணி வேகமாக நடந்து வருகின்றன.
இந்நிலையில் மெட்ரோ பணிக்காக சென்னை மாதவரம் பால் பண்ணை அருகே உள்ள எம்.எம். காலனியை காலி செய்து கொடுக்க அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி லட்சுமி உள்ளிட்ட 3 பேர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தனர்.
சென்னை ஐகோர்ட்டில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், மெட்ரோ பணிக்காக சென்னை மாதவரம் பால் பண்ணை அருகே உள்ள எம்.எம். காலனியை 4 மாதத்தில் காலி செய்து கொடுக்க வேண்டும்.
மேலும் வரும் மே 31-ந்தேதிக்குள் காலி செய்யவில்லை எனில் அரசு நடவடிக்கை எடுக்கலாம் என்று அனுமதி அளித்து உத்தரவிட்டனர்.