கோப்புபடம்.
பருவமழை கைகொடுக்கும் நம்பிக்கையில் மானாவாரியாக மக்காச்சோளம் சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம்
- கடந்த வாரம் பரவலாக அனைத்து பகுதிகளிலும் விளைநிலங்களில் உழவு செய்யும் அளவுக்கு மழைப்பொழிவு இருந்தது.
- இந்தாண்டு மண்டல பாசனத்துக்கு தண்ணீர் ஒரு சுற்றாக குறைக்கப்பட்டது.
மடத்துக்குளம்:
உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் வட்டாரங்களில் பி.ஏ.பி., மண்டல பாசனத்துக்கு பிரதான சாகுபடியாக மக்காச்சோளம் இருந்தது. தீவன உற்பத்திக்கு மக்காச்சோளம் தேவை அதிகமாக இருப்பதால் நல்ல விலையும் கிடைத்து வந்தது. வழக்கமாக ஆகஸ்டு மாதத்தில் மண்டல பாசனத்துக்கு திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படும்.
அதையொட்டி நடவுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, பயிரின் வளர்ச்சி தருணத்தில் பருவ மழை பெய்யும். எனவே அந்த சீசனில் 40 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமாக மக்காச்சோளம் சாகுபடி செய்யப்படும். இந்தாண்டு மண்டல பாசனத்துக்கு தண்ணீர் ஒரு சுற்றாக குறைக்கப்பட்டது. மழையும் பெய்யவில்லை. இதனால் நான்காம் மண்டல ஆயக்கட்டு பகுதியில் விவசாயிகள் மக்காச்சோளம் நடவு செய்ய ஆர்வம் காட்டவில்லை. சிலர் மட்டும் உலர் தீவன தேவைக்காக மக்காச்சோளம் சாகுபடி செய்தனர். இந்நிலையில் கடந்த வாரம் பரவலாக அனைத்து பகுதிகளிலும் விளைநிலங்களில் உழவு செய்யும் அளவுக்கு மழைப்பொழிவு இருந்தது.
இதையடுத்து பெரும்பாலான விவசாயிகள் பருவமழை கைகொடுக்கும் என்ற நம்பிக்கையில் மானாவாரியாக மக்காச்சோளம் நடவு செய்ய துவங்கியுள்ளனர்.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-
மக்காச்சோளம் 90 - 110 நாட்கள் வயதுடையது. பயிரின் வளர்ச்சித்தருணம் மற்றும் கதிர் பிடிக்கும் போது மழை பெய்தால் இறவை பாசனம் போல மானாவாரியிலும், விளைச்சல் கிடைக்க வாய்ப்புள்ளது. குறித்த நேரத்தில் மழை பெய்யாவிட்டால் பயிரின் வளர்ச்சி பாதித்து கதிர்கள் சரியாக பிடிக்காது. விளைச்சலும் ஏக்கருக்கு 100 கிலோ கொண்ட 10 மூட்டையாக குறைந்து விடும்.இருப்பினும் மக்காச்சோள பயிர்களை கால்நடைகளுக்கு உலர் தீவனமாக பயன்படுத்தலாம். வறட்சியால் தீவனத்துக்கு தட்டுப்பாடு நிலவுவதால் மானாவாரியாக மக்காச்சோளம் சாகுபடி செய்ய ஆர்வம் காட்டுகிறோம் என்றனர்.