உள்ளூர் செய்திகள்

பாதயாத்திரை (பேரணி) நடைபெற்ற காட்சி.

திருப்பூரில் மக்கள் மருந்தக வாரம் கொண்டாட்டம்

Published On 2023-03-02 11:09 GMT   |   Update On 2023-03-02 11:09 GMT
  • மார்ச் 1-ந்தேதி முதல் 7-ந் தேதி வரை ஜன் ஒளஷாதி திவாஸ் இந்தியா முழுவதும் நடைபெறுகிறது.
  • தமிழகத்திலேயே 928 மருந்து விற்பனை நிலையங்களில் சிறப்பாக செயல்படும்.

திருப்பூர் :

மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 1-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை ஜன் ஒளஷாதி திவாஸ் (மக்கள் மருந்தக வார கொண்டாட்டம்) இந்தியா முழுவதும் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு 7 நாட்களில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், உறுதிமொழி பாதயாத்திரை (பேரணி), பொதுமக்களுக்கான மருத்துவ முகாம் முதலானவை நடைபெறும். இதன் ஒரு அங்கமாக தமிழகத்திலேயே 928 மருந்து விற்பனை நிலையங்களில் சிறப்பாக செயல்படும் திருப்பூர் மக்கள் மருந்தகத்தின் சார்பாக ஜன் ஒளஷாதி திவாஸ் கொண்டாடப்பட்டது. முதல் நாளான நேற்று வாகனத்தில் ஒவ்வொரு பகுதிகளுக்கும் சென்று மக்கள் மருந்தகத்தின் சிறப்புகளைப் பற்றி விழிப்புணர்வு செய்யப்பட்டது.

இரண்டாம் நாளான இன்று பொதுமக்கள் மற்றும் பயனாளர்கள் கலந்து கொண்ட உறுதிமொழி பாதயாத்திரை (பேரணி) நடைபெற்றது. திருப்பூர் மாநகராட்சி கவுன்சிலர் காடேஸ்வரா தங்கராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேரணியை துவக்கி வைத்தார். மக்கள் மருந்தகத்தின் உரிமையாளரும், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளருமான அருண் பாரத், மத்திய பார்வையாளர் அரவிந்த்சாமி ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.

ஊர்வலமானது மக்கள் மருந்தகத்தின் முன்பு துவங்கி, பழைய பேருந்து நிலையம், காமராஜர் சாலை வழியாக சென்று திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் அருகில் நிறைவு பெற்றது. பேரணியில் பங்கேற்றோர் மக்கள் மருந்தகத்தின் சிறப்புகள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி துண்டு பிரசுரங்களை விநியோகித்தனர். நாளை காலை 10.30 மணியளவில் மங்கலம் சாலையிலுள்ள திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியில் தாயின் ஆற்றல் மரியாதையும், சுயமரியாதையும் என்ற தலைப்பில் பெண்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. திருப்பூர் மக்கள் மருந்தக பணியாளர்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News