தர்மபுரி கலெக்டரின் பெற்றோர் வீட்டில் கொள்ளையடித்த வாலிபர் கைது
- கடந்த மாதம் 2ம் தேதி அதிகாலை, தோட்ட வீட்டுக்குள் புகுந்த, 2 மர்ம நபர்கள் நகை மற்றும் ரூபாயை திருடி சென்றனர்.
- சேவூர் போலீசார் வழக்கு பதிந்து, திருடர்களை தேடி வந்தனர்.
அவிநாசி :
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ள சேவூர் மங்கரசுவலையபாளையம் ஊராட்சி, லுார்துபுரம், பிள்ளையார் கோவில் தோட்டத்தை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (86). இவரது மனைவி சரஸ்வதி(78) இருவரும் தனியாக தோட்டத்து வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகன். இரண்டு மகள்கள். இவர்களது இளைய மகள் சாந்தி, தர்மபுரி மாவட்ட கலெக்டராக உள்ளார்.
கடந்த மாதம் 2ம் தேதி அதிகாலை, தோட்ட வீட்டுக்குள் புகுந்த, 2 மர்ம நபர்கள், கிருஷ்ணசாமியை இரும்பு கம்பியால் தாக்கி, வீட்டிலிருந்த, 7 பவுன் தங்க நகை மற்றும், 7 ஆயிரம் ரூபாயை திருடி சென்றனர். சேவூர் போலீசார் வழக்கு பதிந்து, திருடர்களை தேடி வந்தனர்.
இந்தநிலையில் அவிநாசி - திருப்பூர் ரோட்டில் உள்ள பேக்கரி அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, அங்கு நின்றுகொண்டிருந்த கும்பகோணம், ஆவூர் மேட்டு தெருவை சேர்ந்த மணிகண்டன், (44) என்பவரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் தனது நண்பருடன் தோட்ட வீட்டில் கொள்ளை அடித்தது தெரியவந்தது. பின்னர் சேவூர் போலீசார், மணிகண்டனை கைது செய்தனர். மற்றொருவரை தேடி வருகின்றனர்.