திருச்சி காந்தி மார்க்கெட்டில் வரத்து குறைந்ததால் தக்காளி விலை கடும் உயர்வு
- மகசூல் குறைந்துள்ள காரணத்தினால் தேங்காய் விலையும் உயர்ந்துள்ளது.
- தக்காளி மற்றும் தேங்காயின் விலை உயர்ந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
திருச்சி:
திருச்சி மாநகரின் மையப் பகுதியில் இருக்கும் காந்தி மார்க்கெட் மாநகர் மற்றும் புறநகர் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதோடு அண்டை மாவட்ட மக்களின் காய்கறி தேவைகளையும் பூர்த்தி செய்கிறது. இங்கு தினமும் 15 லோடு தக்காளி உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து வியாபாரிகள் கொள்முதல் செய்வார்கள்.
தற்போது வெளி மாநிலத்தில் தக்காளி விலை கடுமையாக உயர்ந்து உள்ள காரணத்தினால் ஆந்திர, கர்நாடக தக்காளி வாங்க வியாபாரிகள் தயக்கம் காட்டி வருகின்றனர். கடந்த சில நாட்களாக வெளிமாநில தக்காளி வரத்து நிறுத்தப்பட்டுள்ளது. உள்ளூர் தக்காளியும் வரத்து குறைவாகவே உள்ளது. இதனால் தக்காளி விலை கடுமையாக உயர்ந்து உள்ளது.
இது தொடர்பாக தக்காளி மண்டி வியாபாரிகள் சங்க தலைவர் கலீலுல் ரகுமான் கூறும்போது, திருச்சி காந்தி மார்க்கெட்டில் இன்று 25 கிலோ எடை உள்ள ஒரு பெட்டி தக்காளி ரூ.900 முதல் ரூ.1100 வரை விற்பனை ஆனது. தற்போது திருச்சி, கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை, ஒட்டன்சத்திரம், பழனி உள்ளிட்ட உள்ளூர் தக்காளி வரத்தை மட்டுமே உள்ளது. ஆந்திரா தக்காளி ஒரு பெட்டிக்கு அங்கேயே ரூ. 1500 விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. வரும்போது ரூ.2000 வரை விலை நிர்ணயம் செய்யும் நிலை ஏற்படும்.
ஆகவே இங்குள்ள வியாபாரிகள் வெளி மாநில தக்காளி வாங்குவதை நிறுத்திவிட்டனர். இன்று 8 லோடு உள்ளூர் தக்காளி மட்டுமே திருச்சி காந்தி மார்க்கெட்டுக்கு வந்தது. அவ்வளவும் உடனடியாக விற்பனையாகி விட்டது. கடுமையான வெயிலின் காரணமாக தக்காளி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இந்த விலை மேலும் உயரம் வாய்ப்பு உள்ளது என்றார்.
திருச்சி காந்தி மார்க்கெட் சில்லரை சந்தையில் ஒரு கிலோ தக்காளி இன்று 50 முதல் 60 வரை விற்கப்பட்டது.
இதேபோன்று மகசூல் குறைந்துள்ள காரணத்தினால் தேங்காய் விலையும் உயர்ந்துள்ளது. காந்தி மார்க்கெட்டில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஒரு கிலோ தேங்காய் ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்டது.
நேற்று ரூ.60-க்கு விற்கப்பட்டது. இன்று மேலும் வரத்து குறைந்து நல்ல தேங்காய் ரூ.65-க்கு விற்பனை செய்யப்பட்டது.
சில்லரை சந்தைகளில் ஒரு தேங்காய் ரூ.30 முதல் 40 வரை விலை நிர்ணயம் செய்திருந்தனர். தக்காளி மற்றும் தேங்காயின் விலை உயர்ந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.