உள்ளூர் செய்திகள்

கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்

Published On 2024-07-14 05:27 GMT   |   Update On 2024-07-14 05:27 GMT
  • கடந்த சில நாட்களாக சாரல் மழையுடன் இதமான சீதோசனம் நிலவி வருகிறது.
  • நட்சத்திர ஏரியில் உற்சாகமாக படகு சவாரியும், ஏரிச்சாலையில் குதிரை மற்றும் சைக்கிள் சவாரி செய்து மகிழ்ந்தனர்.

கொடைக்கானல்:

மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

தற்போது வெயிலின் தாக்கம் குறைந்த நிலையில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக சாரல் மழையுடன் இதமான சீதோசனம் நிலவி வருகிறது. இன்று விடுமுறை தினம் என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் அதிக அளவில் வந்திருந்தனர். குறிப்பாக கேரளாவில் இருந்து அதிக சுற்றுலா வாகனங்கள் வந்தது. இதனால் நகர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

இயற்கை எழில் சூழ்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள பைன்பாரஸ்ட், மோயர்பாயிண்ட், தூண்பாறை, குணாகுகை, தொப்பி தூக்கி பாறை, கோக்கர்ஸ் வாக் உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. மேலும் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில் உற்சாகமாக படகு சவாரியும், ஏரிச்சாலையில் குதிரை மற்றும் சைக்கிள் சவாரி செய்து மகிழ்ந்தனர்.

பிரையண்ட் பூங்காவிலும் சுற்றுலா பயணிகள் அதிக அளவு வந்திருந்தனர். அவர்கள் பூக்களின் அழகை கண்டு ரசித்தனர். மேல்மலை பகுதியான மன்னவனூருக்கும் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் படையெடுத்தனர். அங்கு எழும்பள்ளம் ஏரியில் பரிசல் சவாரியும் மேல்பரப்பில் ஜிப்லைன் உள்ளிட்ட சாகச பயணங்களிலும் ஈடுபட்டனர். அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்ததால் ஓட்டல் உரிமையாளர்கள், வியாபாரிகள் உள்பட சுற்றுலா தொழிலை நம்பி உள்ளவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

Similar News