ரெயிலில் பெண்களிடம் நகை பறித்த வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது
- விருத்தாச்சலத்தில் ரெயில் பயணிகளிடம் நகை பறித்த சம்பவத்தில் சக்திவேல் போலீசாரிடம் சிக்கினார்.
- 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைதாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
திண்டுக்கல்:
மதுரை பொன்மேனி பகுதியை சேர்ந்தவர் சங்கரி. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் இருந்து மதுரைக்கு வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்றார். அப்போது திண்டுக்கல்லை அடுத்த அம்பாத்துரை பகுதியில் தண்டவாள பராமரிப்பு பணி நடைபெற்றது. இதனால் ரெயில் அந்த பகுதியில் மெதுவாக சென்றது. அதை பயன்படுத்திக் கொண்ட ஒரு வாலிபர் சங்கரி கழுத்தில் அணிந்து இருந்த 5 பவுன் சங்கிலியை பறிக்க முயன்றார். உடனே சுதாரித்து கொண்ட சங்கரி சங்கிலியை பிடித்து கொண்டு சத்தம் போட்டார்.
இருந்த போதும் பாதி அறுந்த சங்கிலியுடன் அந்த வாலிபர் ரெயிலில் இருந்து குதித்து தப்பியோடிவிட்டார். அதேபோல் செங்கல்பட்டு பகுதியை சேர்ந்த செல்வி (வயது 55) 3 ஆண்டுகளுக்கு முன்பு வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் மதுரைக்கு சென்றார். அந்த ரெயில் அம்பாதுரை அருகே மெதுவாக சென்றபோது அவர் அணிந்து இருந்த 6 பவுன் சங்கிலியை ஒரு வாலிபர் பறித்து கொண்டு தப்பி சென்றார். இந்த சம்பவங்கள் தொடர்பாக இருவரும் கொடுத்த புகாரின் பேரில் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
இந்த 2 சம்பவங்களிலும் ஒரே நபர் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தப்பட்டது. அதில் அரியலூர் மாவட்டம் செந்துறையை சேர்ந்த சக்திவேல் பயணிகளிடம் நகை பறித்தது தெரியவந்தது. எனவே அவரை போலீசார் தேடிவந்தனர்.
இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விருத்தாச்சலத்தில் ரெயில் பயணிகளிடம் நகை பறித்த சம்பவத்தில் சக்திவேல் போலீசாரிடம் சிக்கினார். பின்னர் அவர் அரியலூர் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் தலைமறைவானார். இதையடுத்து திண்டுக்கல் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் தூயமணி வெள்ளைச்சாமி, சப்-இன்ஸ்பெக்டர் அருணோதயம் ஆகியோர் சக்திவேலை கைது செய்து திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவர் மீண்டும் அரியலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.இதன் மூலம் 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைதாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.