உள்ளூர் செய்திகள் (District)

கோப்பு படம்.

பெரியாறு அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு நிறுத்தம்

Published On 2023-11-06 08:02 GMT   |   Update On 2023-11-06 08:02 GMT
  • முல்லைப்பெரியாற்றில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதாலும் அணையின் நீர்மட்டம் வேகமாக நிரம்பி வருகிறது.
  • வருகிற 10ந் தேதி முதல் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கூடலூர்:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வரும் நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ள தேனி மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளின் நீர்மட்டம் வேகமாக நிரம்பி வருகிறது.

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 125.85 அடியாக உள்ளது. வரத்து 980 கன அடியாகவும், திறப்பு 105 கன அடியாகவும் உள்ளது. அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டு குடிநீருக்காக மட்டும் திறக்கப்படுகிறது. இதன் காரணமாக லோயர்கேம்ப் மின் உற்பத்தி நிலையத்தில் மின்சாரம் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

முல்லைப்பெரியாற்றில் உள்ள லோயர்கேம்ப் குருவனூத்து பாலம், காஞ்சிமரத்துறை, வெட்டுக்காடு, குள்ளப்பகவுண்டன்பட்டி ஆகிய இடங்களில் ஆற்றின் குறுக்கே உள்ள சிறு புனல் மின் நிலையங்களில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. நீர் திறப்பு 500 கன அடிக்கு மேல் அதிகரித்தால் மட்டுமே மீண்டும் மின் உற்பத்தி தொடங்கும் என அதி காரிகள் தெரிவித்துள்ளனர்.

வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழை காரணமாகவும் முல்லைப்பெரியாற்றில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதாலும் அணையின் நீர்மட்டம் வேகமாக நிரம்பி வருகிறது. 71 அடி உயரம் உள்ள அணையின் நீர்மட்டம் தற்போது 67.26 அடியாக உள்ளது. வரத்து 2680 கன அடியாகவும், திறப்பு 69 கன அடியாகவும் உள்ளது. நீர் இருப்பு 5147 மி.கன அடியாக உள்ளது.

வைகை அணையின் கரையோரப்பகுதியில் உள்ள தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்ட மக்களுக்கு 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும் நிலை உள்ளது. வருகிற 10ந் தேதி முதல் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதனால் கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி பொதுப்பணி த்துறை மற்றும் வருவா ய்த்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.

மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 51.50 அடியாக உள்ளது. வரத்து மற்றும் திறப்பு 100 கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.67 அடி. வரத்து மற்றும் திறப்பு 336 மி.கன அடி.

கன மழை காரணமாக கும்பக்கரை அருவியில் இன்று 4-ம் நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதே போல் சுருளி அருவியிலும், போடி அணைக்கரை பிள்ளையார் அருவியிலும் தண்ணீர் அதிக அளவு செல்வதால் அங்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்த ப்பட்டுள்ளது. மேலும் சோத்துப்பாறை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ள தால் வராக நதியில் வெள்ள ப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே கரையை கடந்து பொது மக்கள் செல்ல வேண்டாம் என பொது ப்பணித்துறையினர் எச்சரித்துள்ளனர்.

பெரியாறு 2.8, தேக்கடி 6.8, கூடலூர் 4.2, உத்தம பாளையம் 3.6, சண்முகாநதி அணை 5.4, போடி 8, வைகை அணை 3, மஞ்ச ளாறு 4, சோத்துப்பாறை 18, பெரியகுளம் 8, வீரபாண்டி 12, அரண்மனைப்புதூர் 6, ஆண்டிபட்டி 5 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

Tags:    

Similar News