கொடைக்கானலில் தனியார் தோட்டங்களில் பற்றி எரியும் காட்டுத்தீ
- 100 ஏக்கருக்கும் மேலான இடங்களில் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது.
- கடந்த 2 நாட்களாக கொடைக்கானல் மலைப்பகுதிகளில் வெயில் வாட்டி வருகிறது.
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானல் உலகளாவிய சுற்றுலாத்தலமாகும். இங்கு கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக வறண்ட வானிலையே நிலவி வருகிறது.
குறிப்பாக கடந்த 2 நாட்களாக கொடைக்கானல் மலைப்பகுதிகளில் பல்வேறு இடங்களில் வெயில் வாட்டி வருகிறது. கொடைக்கானலை சுற்றி ஏராளமான வனப்பகுதிகள் மற்றும் உபயோகப்படுத்தாத வருவாய் நிலங்கள் அமைந்திருக்கிறது.
கொடைக்கானல் அருகே உள்ள வில்பட்டி பஞ்சாயத்துக்குட்பட்ட புலியூர் கிராமம் செல்லக்கூடிய சாலையில் இருப்புறங்களிலும் 100 ஏக்கருக்கும் மேலான பரப்பிலான இடங்களில் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது.
இதன் காரணமாக செடிகள், மரங்கள் முழுவதும் எரிந்து நாசமாகும் அபாயம் உள்ளது. கொடைக்கானலின் பல்வேறு இடங்களில் மலைகள் மற்றும் இயற்கையை ரசிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் மலைப்பாங்கான இடங்களில் தற்காலிக விடுதிகள் அமைக்கப்பட்டிருக்கிறது.
குறிப்பாக மரக்கட்டைகளால் ஆன மரப்பலகைகளாலான விடுதி, பிரேம் விடுதி, டோம் விடுதிகள் உள்ளிட்ட பல்வேறு தற்காலிக விடுதிகள் அமைக்கப்பட்டிருக்கிறது. இதுபோன்ற தற்காலிக விடுதிகளில் தங்குவதற்கு சுற்றுலாப் பயணிகள் கடந்த சில மாதங்களாக பெரும் வரவேற்பு கொடுத்திருந்த நிலையில் பல்வேறு இடங்களில் முறையாக அனுமதி பெறாமலும் வனப் பகுதிக்கு அருகேயும் இதுபோன்ற விடுதிகள் அமைக்கப்பட்டிருக்கிறது.
இங்கு காட்டுத்தீ பெரிய அளவில் பரவும் அபாயம் உள்ளது. எனவே விடுதிகளில் தங்கும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.