சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பலி- இரண்டு வாலிபர்கள் படுகாயம்
- தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டதுடன் கால் முறிவும் ஏற்பட்டது.
- போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அலங்காநல்லூர்:
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகேயுள்ள வலசை கிராமத்தை சேர்ந்தவர் ரகுபதி. இவர் தனக்கு சொந்தமான பழைய ஓட்டு வீட்டை இடிக்க இன்று காலை அதே ஊரை சேர்ந்த 3 பேரை வேலைக்கு அழைத்திருந்தார். அதன்பேரில் 3 பேர் வந்திருந்தனர். அவர்கள் காலையிலேயே பணிகளை தொடங்கினர்.
வீட்டின் சுவரை இடித்து கொண்டிருந்த போது பக்கவாட்டு சுவர் இடிந்து அவர்களது மேலேயே எதிர்பாராத விதமாக விழுந்தது. இதில் வலசை, கருப்பு கோவில் தெருவை சேர்ந்த அரியமலை (வயது 35) என்பவர் மீது சுவர் முழுவதுமாக இடிந்து விழுந்ததில் இடிபாடுகளுக்குள் சிக்கிய அவர் சம்பவ இடத்திலேயே மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் இந்த வீடு இடிப்பு பணியில் ஈடுபட்டிருந்த கார்த்திக் (35), கருப்புசாமி (32) ஆகியோருக்கு தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டதுடன் கால் முறிவும் ஏற்பட்டது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர்.
பின்னர் அவர்களை மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த அலங்காநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று காலை நடைபெற்ற இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.