செய்திகள்

விருதுநகர் அருகே ரூ.2¼ கோடி தங்கம்- ரூ.7½ லட்சம் வெள்ளி நகை பறிமுதல்

Published On 2019-03-31 10:38 IST   |   Update On 2019-03-31 10:38:00 IST
வேனில் கொண்டு செல்லப்பட்ட ரூ. 2 கோடியே 27 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் ரூ. 7 லட்சத்து 52 ஆயிரம் மதிப்பிலான வெள்ளி பொருட்கள் பறக்கும் படையினரால் கைப்பற்றப்பட்டது. #LokSabhaElections2019

விருதுநகர்:

பாராளுமன்ற தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்கும் வகையில் தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

நிலை கண்காணிப்பு குழு, பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு நடத்தப்படுகிறது. விருதுநகர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் சங்கர் தலைமையிலான கண்காணிப்பு குழு நேற்று இரவு விருதுநகர்-சிவகாசி சாலையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தது.

அப்போது அங்கு வந்த சரக்கு பார்சல் வேனை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். வேனுக்குள் ஏராளமான அட்டை பெட்டிகளில் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் இருந்தன.

அதுபற்றி விசாரித்த போது மதுரையில் உள்ள பிரபல நகைக்கடையில் இருந்து பல்வேறு ஊர்களின் கடைகளுக்கு கொண்டு செல்லப்பட்ட நகைகள் என தெரிய வந்தது.

வேனில் வந்த கடை மேலாளர் ஹரிகரன், காவலாளி பீட்டர்ஜோசப், டிரைவர் நாகராஜன் ஆகியோர் இதனை தெரிவித்தபோதும், தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களுக்கு முறையான ஆவணங்கள் இல்லை என அவை பறிமுதல் செய்யப்பட்டன.

ரூ. 2 கோடியே 27 லட்சத்து 3 ஆயிரத்து 377 மதிப்பிலான தங்க நகைகளும், ரூ. 7 லட்சத்து 52 ஆயிரத்து 818 மதிப்பிலான வெள்ளிப் பொருட்களும் கைப்பற்றப்பட்டு தாசில்தார் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது. #LokSabhaElections2019

Tags:    

Similar News