கடும் பனி மூட்டத்தால் ஆம்னி பஸ் மோதி 146 ஆடுகள் பலி: பொதுமக்கள் சாலை மறியல்
- பஸ் கடும் பனிமூட்டம் காரணமாக ஆட்டு மந்தையில் புகுந்தது.
- சக்கரத்தில் சிக்கி ஆடுகள் 100 மீட்டர் தூரத்திற்கு இழுத்துச் சென்றது.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம், நாராயணன் பேட்டை, தன்வாடாவை சேர்ந்தவர் மல்லேஷ். இவரது மாமா கர்ரெப்பா மற்றும் சிலர் தங்களது 600 ஆடுகளை பல்நாடு மாவட்டத்தில் மேய்த்து வந்தனர்.
நேற்று அதிகாலை புதுக்காலு நெடுஞ்சாலையில் மேம்பாலம் வழியாக ஆடுகளை ஓட்டி சென்றனர். அப்போது அந்த வழியாக வந்த ஆம்னி பஸ் கடும் பனிமூட்டம் காரணமாக ஆட்டு மந்தையில் புகுந்தது.
பஸ்சின் சக்கரத்தில் சிக்கி ஆடுகள் 100 மீட்டர் தூரத்திற்கு இழுத்துச் சென்றது. இதனைக் கண்ட பஸ் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
பஸ் சக்கரத்தில் சிக்கி 146 ஆடுகள் இறந்தது தெரிய வந்தது. சாலை முழுவதும். ஆட்டின் உடல்கள் சிதறியபடி ரத்தம் வழிந்தோடியது. ஆட்டின் உரிமையாளர்கள் சுமார் ரூ.18 லட்சம் மதிப்பிலான ஆடுகள் இறந்து விட்டதாகவும், இழப்பீடு வழங்க கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து ஆட்டின் உரிமையாளர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.