ஆன்லைன் 'மேட்ரிமோனி' மூலம் 3 பேரை ஏமாற்றி திருமணம்- ரூ.1.21 கோடி மோசடி செய்த இளம்பெண் கைது
- சீமா விவாகரத்து பெற்ற பணக்காரர்களை குறி வைத்து மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
- மோசடிக்கு உடந்தையாக இருப்பவர்கள் யார்? யார்? என்று போலீசர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஜெய்ப்பூர்:
உத்தரகாண்ட் மாநிலம் ஜோத்வாராவில் வசிக்கும் பிரபல நகைக்கடை அதிபர் தனக்கு மணப்பெண் தேடினார். இதற்காக ஆன்லைன் மூலம் திருமண இணையதளத்தில் பதிவு செய்திருந்தார். அதில் ஒரு பெண் அவருக்கு அறிமுகமானார். அவர் தன்னை சீமா என்று அறிமுகம் செய்துகொண்டார்.
சீமாவின் உறவினர்கள் என்று சிலரும் அறிமுகம் ஆனார்கள். இதையடுத்து ஜெய்ப்பூரில் உள்ள மானசரோவரில் திருமணம் செய்து கொண்டனர். திருமணமாகி 4 மாதங்களே ஆன நிலையில், ரூ.6.5 லட்சம் ரொக்கம் மற்றும் ரூ.30 லட்சம் மதிப்புள்ள தங்கம், வெள்ளி, வைர நகைகள் உள்ளிட்ட மதிப்புமிக்க பொருட்களை எடுத்துக்கொண்டு ஓடிவிட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த நகைக்கடை அதிபர் அந்த பெண்ணின் ஊரான டோராடூனுக்கு சென்று விசாரித்தார். அப்போது அங்கு இருந்த சீமா வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக போலீசில் புகார் செய்து விடுவதாக மிரட்டினார்.
இதுபற்றி நகைக்கடை அதிபர் அங்குள்ள முரளிபுரா போலீசில் புகார் செய்தார். போலீஸ் நிலைய அதிகாரி சுனில் குமார் ஜாங்கிட், சப்-இன்ஸ்பெக்டர் வசுந்தரா ஆகியோர் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படையினர் டேராடூன் சென்று சீமா அகர்வாலை கைது செய்தனர். விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியானது.
கைது செய்யப்பட்ட இளம்பெண் நிக்கி என்ற சீமா அகர்வால் என்பதும் அவர் ஆன்லைன் திருமண தளங்கள் மூலமாக சீமா விவாகரத்து பெற்ற பணக்காரர்களை குறி வைத்து மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
அவர்களின் முழுமையான தகவல்களை பெற்று, பின்னர் திருமணம் செய்து கொண்டு 3, 4 மாதங்களில் அவர்களின் நம்பிக்கையை பெற்று பல லட்சம் மதிப்புள்ள நகை, பணம், பொருட்களுடன் கம்பி நீட்டுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
ஏற்கனவே இவர் கடந்த 2013-ம் ஆண்டு ஆக்ராவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் மகனை சீமா திருமணம் செய்துள்ளார். சில நாட்களுக்கு பிறகு அவர் மீது வரதட்சணை வழக்கு பதிவு செய்து அந்த தொழிலதிபரிடம் இருந்து ரூ.75 லட்சத்தை மிரட்டி பணம் பறித்ததும் தெரியவந்தது.
இதேபோன்று 2017-ம் ஆண்டு குருகிராமில் உள்ள சாப்ட்வேர் என்ஜினீயரை திருமணம் செய்து அவர் மீதும் அவரது உறவினர் மீது கற்பழிப்பு புகார் கூறி ரூ.10 லட்சம் பறித்துள்ளார். 3 பேரை ஏமாற்றி திருமணம் செய்து ரூ.1.21 கோடி வரை அவர் மோசடி செய்துள்ளார். மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
கைதான இளம்பெண் சீமா வேறு யாரையும் இதுபோன்று மோசடி செய்துள்ளாரா? அவரது மோசடிக்கு உடந்தையாக இருப்பவர்கள் யார்? யார்? என்று போலீசர விசாரணை நடத்தி வருகிறார்கள்.