மருத்துவக் கழிவுகளை கையாள்வதில் கேரள அரசு தோல்வியடைந்து விட்டது: உயர்நீதிமன்றம் கண்டனம்
- மருத்துவக் கழிவுகளை அப்புறப்படுத்த பசுமை தீர்ப்பாயம் கெடு விதித்தது.
- இன்றுடன் கெடு முடிவடையும் நிலையில், கேரள உயர்நீதிமன்றம் அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
கேரள மாநிலத்தின் மருத்துவக் கழிவுகள், திடக்கழிவுகள், கோழிக் கழிவுகள் இரு மாநில எல்லையில் உள்ள தமிழக பகுதிகளில் கேரள மாநிலத்தினர் கொட்டிவிட்டு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். தமிழ்நாட்டில் இருந்து எதிர்ப்பு தெரிவித்தபோதிலும் தொடர்ந்து இந்த சம்பவம் நடைபெற்று கொண்டுதான் இருக்கிறது.
இந்த நிலையில்தான் கடந்த சில நாட்களுக்கு முன் திருநெல்வேலி மாவட்டம், நடக்கல்லூர் உள்ளிட்ட கிராமங்களில் 6 இடங்களில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டன.
இது தொடர்பாக பல்வேறு அமைப்புகள் புகார் அளிக்க, தேசிய பசுமை தீர்பாயம் கழிவுகளை இன்னும் 3 நாட்களில் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் கேரள அரசுக்கு உத்தரவிட்டது. பசுமை தீர்ப்பாயத்தின் கெடு இன்றுடன் முடிவடைகிறது.
பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவையடுத்து கேரள மாநில உயர்நீதிமன்றத்தின் சிறப்பு அமர்வு இது தொடர்பாக விசாரண நடத்தியது.
அப்போது மருத்துவக் கழிவுகளை கையாள்வதில் கேரள மாநில அரசு தோல்வியைடந்து விட்டது. மருத்துவக் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என கண்டனம் தெரிவித்தது. அத்துடன் இது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என கேரள அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
பசுமை தீர்பாயத்தியன் உத்தரவை தொடர்ந்து கேரள அரசு கொட்டப்பட்ட கழிவுகள் தொடர்பாக ஆய்வு நடத்த அதிகாரிகள் குழுவை அனுப்பியது. இந்த குழு ஆய்வு செய்த நிலையில் கொட்டப்பட்டுள்ள கழிவுகள் அபாயகரமானது அல்ல எனத் தெரிவித்தது. இந்த குழு அரசிடம் அளிக்கும் அறிக்கையை தொடர்ந்து கேரள அரசு நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கலாம்.