செய்திகள்

காஷ்மீர்: ரஜோரி மாவட்ட எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறி துப்பாக்கிச் சூடு - இந்தியா பதிலடி

Published On 2017-04-04 15:03 IST   |   Update On 2017-04-04 15:03:00 IST
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ரஜோரி மற்றும் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைக்கோட்டுப் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் பாகிஸ்தான் மூன்று முறை துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தியதாகவும் இந்திய வீரர்கள் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.
ஸ்ரீநகர்:

ரஜோரி மாவட்டத்தில் உள்ள பிம்பெர் காலி என்ற இடத்தில் உள்ள சர்வதேச எல்லைக் கோட்டுப் பகுதியில் இன்று காலை 11 மணியில் இருந்து பாகிஸ்தான் ராணுவத்தினர் துப்பாக்கிகளால் சுட்டும், கையெறி குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்திய வீரர்கள் இதற்கு தகுந்த பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இருதரப்பினருக்கும் இடையில் அங்கு தொடர்ந்து துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது என ராணுவ செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.



முன்னதாக, காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லைக்கோட்டுப் பகுதியில் உள்ள இந்திய நிலைகளின்மீது நேற்றும் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறிய வகையில் துப்பாக்கிகளால் சுட்டும், மோர்ட்டார் ரக குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர்.

இருதரப்பினருக்கும் தொடர்ந்து நீடித்த துப்பாக்கிச் சண்டை, மற்றும் மோர்ட்டார் குண்டு வீச்சினால் அருகாமையில் இந்திய எல்லைக்குட்பட்ட திக்வர் பகுதியில் வசிக்கும் மக்கள் பெரும் பீதியில் உறைந்துள்ளனர்.

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய வகையில் கடந்த 24 மணி நேரத்தில் பாகிஸ்தான் ராணுவம் நடத்தியுள்ள மூன்றாவது தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News