செய்திகள்

செல்லாத ரூபாய் நோட்டுகளாக விநாயகருக்கு ரூ. 1 லட்சம் காணிக்கை

Published On 2017-09-10 10:57 GMT   |   Update On 2017-09-10 10:57 GMT
மும்பையில் விநாயகர் சிலை வைக்கப்பட்டிருந்த இடத்தில் உண்டியல் காணிக்கையாக செல்லாத ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செலுத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது.
மும்பை:

மகாராஷ்டிர மாநில தலைநகரான மும்பையில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அவ்வகையில், இந்த ஆண்டு விநாயகர்  சதுர்த்தி விழா கடந்த மாதம் 25-ம் தேதி தொடங்கி இந்த மாதம் 5-ம் தேதி வரை நடைபெற்றது.

மும்பை நகருக்குட்பட்ட பல பகுதிகளில் பிரமாண்ட பந்தல்கள் அமைக்கப்பட்டு விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. குறிப்பாக, பரேலி பகுதியில் உள்ள லால்பவுக்ச்சா ரஜா பகுதியில் அமைக்கப்படும் விநாயகர் சிலை ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களை பரவசப்படுத்தும்.

கடந்த மாதம் 29-ம் தேதி மும்பையை சூறையாடிய தொடர் மழையின் எதிரொலியாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய நிலையில் வாகனப் போக்குவரத்தும் தடைபட்டது. இந்நிலையில், லால்பவுக்ச்சா ரஜா பகுதியில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைக்கு உண்டியல் காணிக்கையாக செலுத்தப்பட்ட பணத்தை எண்ணியபோது அதில் கடந்த ஆண்டு மதிப்பிழப்பு செய்யப்பட்ட ஆயிரம் மற்றும் ஐநூறு ரூபாய் நோட்டுகள் கிடந்தது தெரியவந்தது.

மொத்தம் இருந்த 105 ஆயிரம் ரூபாய் நோட்டுகளில் ஒன்று கிழிந்துபோய் கிடந்ததாகவும், பழைய 500 ரூபாய் நோட்டுகள் 50 காணப்பட்டதாகவும், மும்பை அறங்காவல் துறை அலுவலர்கள் குறிப்பிட்டனர். அந்த பந்தலில் மட்டும் மொத்தத்தில் உண்டியல் காணிக்கையாக 5 கோடியே 93 லட்சத்து 14 ஆயிரத்து 800 ரூபாய் செலுத்தப்பட்டிருந்ததாக தெரிவித்த அதிகாரிகள்,  தங்கம், வெள்ளி ஆபரணங்கள் விநாயகருக்கு செலுத்தப்பட்ட ரூபாய் நோட்டு மாலைகளின் மதிப்பு இதில் சேர்க்கப்படவில்லை என கூறினர்.

கடந்த ஆண்டு சுமார் 8 கோடி ரூபாய் அளவுக்கு உண்டியல் வசூல் இருந்ததாகவும், இந்த ஆண்டு மழையினால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடக்க நேர்ந்ததால் காணிக்கையின் அளவு குறைந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

Similar News