செய்திகள்

ஆதார் அட்டைக்கு சட்ட அங்கீகாரம் விரைவில் கிடைக்கும்: அருண் ஜெட்லி

Published On 2017-09-14 07:09 IST   |   Update On 2017-09-14 07:09:00 IST
ஆதார் அட்டை திட்டத்துக்கு அரசமைப்புச் சட்ட அங்கீகாரம் கிடைக்கும் என்று மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

அரசு குடிமக்களுக்கு வழங்கக்கூடிய அனைத்து நலத்திட்ட உதவிகளுக்கும் ஆதார் அட்டை கட்டாயம் என்ற நிலை கிட்டத்தட்ட வந்துவிட்டது. இருப்பினும், ஒருவரது தனிப்பட்ட தகவல்கள் அனைத்தும் அடிப்படை உரிமையே என்று சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் தீர்ப்பளித்தது.

ஆதார் அட்டை தொடர்பான அனைத்து வழக்குகளும் நவம்பர் மாதத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாகவும் நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், ஆதார் அட்டைக்கு அரசியல் சட்ட அங்கீகாரம் விரைவில் கிடைக்கும் என மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி கூறியுள்ளார்.

புது டெல்லியில் நேற்று ஐ.நா. சார்பில் நடைபெற்ற அனைவருக்கும் நிதிச் சேவை தொடர்பான மாநாட்டில் பங்கேற்ற அருண் ஜெட்லி, “ஆதார் அட்டை திட்டம் கடந்த காங்கிரஸ் கூட்டணியில் அறிமுகப்படுத்தப்பட்டதாக இருக்கலாம். ஆனால், அதற்கு சட்ட அங்கீகாரம் கொடுத்தது பா.ஜ.க அரசுதான். அரசின் மானியங்கள் உரிய பயனாளிகளுக்கு கிடைப்பதை உறுதி செய்ய 
ஆதார் எண் மிகவும் உதவிகரமாக உள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “ஆதாருக்காக பெறப்பட்ட தகவல்களைப் பாதுகாக்கவும், தனிநபர் உரிமையைப் பாதுகாக்கவும் சட்டத்தின் மூலம் இரும்புச் சுவரை மத்திய அரசு அமைத்துள்ளது. எனவே, அரசமைப்புச் சட்டப்படி ஆதாருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். உச்ச நீதிமன்றத்தின் 9 நபர்கள் அடங்கிய அரசியல்சாசன அமர்வு அண்மையில், நாட்டின் குடிமக்களின் தனிப்பட்ட உரிமை குறித்து தீர்ப்பளித்தது. அவர்கள் சட்டத்தின்படி இந்த விஷயத்தை அணுகியுள்ளனர். அதே நேரத்தில், தேசப் பாதுகாப்பு, குற்றங்களைக் கண்டறிவது, சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை அமல்படுத்துவது ஆகியவற்றில் தனியுரிமை பெரிய பிரச்னையாக இருக்கக் கூடாது.” என்று அவர் பேசினார்.

Similar News