செய்திகள்

வெடிகுண்டு மிரட்டல்: அவசரமாக கொல்கத்தாவில் தரையிறக்கப்பட்ட கோஏர் விமானம்

Published On 2017-11-07 18:46 GMT   |   Update On 2017-11-07 18:46 GMT
டெல்லியில் இருந்து கொல்கத்தாவுக்கு சென்ற கோஏர் நிறுவன விமானம் வெடிகுண்டு மிரட்டல் காரணமாக கொல்கத்தாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
கொல்கத்தா:

டெல்லியில் இருந்து கொல்கத்தாவுக்கு கோஏர் விமான நிறுவனத்துக்கு சொந்தமான g8 127 என்ற விமானம் 180 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. இந்த விமானத்தில் ஒர் கடிதத்தை விமானி கண்டெடுத்தார்.

அதில் விமானத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக எழுதப்பட்டிருந்தது. இதனை படித்த விமானிகள் நிறுவனத்திற்கு உடனடியாக தகவல் அளித்தனர். மேலும் அந்த விமான நிறுவனத்திற்கும் ஒரு மர்ம நபர் போன் செய்து விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக கூறினார். இதையடுத்து விமானம் அவசரமாக கொல்கத்தா விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

விமானம் யாரும் இல்லாத தனிப்பட்ட ஓடிதளத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு பயணிகள் உடனடியாக இறக்கிவிடப்பட்டனர். இதனையடுத்து, விமானத்தை முழுவதுமாக சோதனையிட்ட போலீசார் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் அச்சுறுத்தும் வகையிலான பொருட்கள் எதையும் கண்டெடுக்கவில்லை. இதையடுத்து அந்த மிரட்டல் புரளி என போலீசார் கூறினர். இதனையடுத்து, விமானிகள், சிப்பந்திகள் மற்றும் 180 பயணிகளிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

கடந்த அக்டோபர் 30-ம் தேதி மும்பையிலிருந்து டெல்லி சென்ற விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக புரளியை கிளப்பிய மும்பையில் வசிக்கும் குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தைச் சேர்ந்த நகை வியாபாரி பிர்ஜு சல்லா என்பவரை போலீசார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News