செய்திகள்

விஜய் மல்லையா கடன் வாங்கியது குறித்த எந்த ஆவணங்களும் இல்லை: நிதியமைச்சகம்

Published On 2018-02-07 16:19 GMT   |   Update On 2018-02-07 16:19 GMT
வங்கிகளில் கடன் பெற்று தற்போது லண்டனில் இருக்கும் விஜய் மல்லையா, வாங்கிய கடன் தொடர்பாக எந்த ஆவணங்களும் இல்லை என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

டெல்லியைச் சேர்ந்த ராஜீவ் குமார் காரே என்பவர் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் நிதி அமைச்சகத்திடம் விஜய் மல்லையாவுக்கு வங்கிகள் சார்பில் வழங்கப்பட்ட கடன்கள் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். இந்த கேள்விக்கு மத்திய நிதி அமைச்சகம் சார்பில் தற்பொழுது பதில் அளிக்கப்பட்டுள்ளது.

அதில், விஜய் மல்லையாவுக்கு வங்கிகள் சார்பில் வழங்கப்பட்ட கடன் அளவு குறித்த எந்த ஆவணங்களும் எங்களிடம் இல்லை. அவருக்கு கடன் கொடுத்த வங்கிகள் எவை? யார் யாரெல்லாம் அவரின் கடனுக்குகாக வங்கிகளுக்கு உத்தரவாதம் அளித்தார்கள்? என்பது உட்பட எந்த ஆவணங்களும் எங்களிடம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பதில் குறித்து கருத்து தெரிவித்துள்ள தலைமை தகவல் ஆணையர் ஆர்.கே.மாத்தூர்,‘நிதி அமைச்சகத்தின் பதில் தெளிவற்றதாகவும், சட்டத்தின் அடிப்படையிலும் இல்லை’ எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு நிதித்துறை இணையமைச்சர் சந்தோஷ் குமார் கெங்குவார் “'மல்லையாவுக்கு கடந்த 2004-ம் ஆண்டு முதல் 2008-ம் ஆண்டு பிப்ரவரி வரை வங்கிகளிடம் இருந்து ரூ.8,400 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் தற்பொழுது வரை வராக்கடன்களாக இருக்கின்றன. இவற்றில் வங்கிகள் மல்லையாவின் சொத்துக்களை ஏலம் விட்டு ரூ 155 கோடியை வசூல் செய்துள்ளது” என எழுத்துப்பூர்வமாக பதில் தாக்கல் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News