செய்திகள்

பெங்களூருவில் இந்திய அறிவியல் கழக ஆய்வகத்தில் வெடிவிபத்து - ஆராய்ச்சியாளர் பலி

Published On 2018-12-06 00:36 GMT   |   Update On 2018-12-06 00:36 GMT
பெங்களூருவில், இந்திய அறிவியல் கழக ஆய்வகத்தில் நேற்று நடந்த வெடிவிபத்தில் ஆராய்ச்சியாளர் இறந்தார். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர். #Scientist #Explosion #IndianInstituteScience
பெங்களூரு:

பெங்களூரு சதாசிவநகரில் இந்திய அறிவியல் கழகம் அமைந்துள்ளது. இங்கு விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சி படிப்பு பயிலும் மாணவர்கள் பல்வேறு துறை தொடர்பான ஆய்வுகளை நடத்தி வருகிறார்கள். இங்கு விண்வெளி என்ஜினீயரிங் துறையின் கீழ் அதிவேக மற்றும் அதிர்வு அலைகள் பற்றிய ஆய்வுகள் மேற்கொள்வதற்கான ஆய்வகம் தொடங்கப்பட்டது.

தனியார் நிறுவனம் அமைத்த இந்த ஆய்வகமானது இந்திய அறிவியல் கழகத்தில் விண்வெளி என்ஜினீயரிங் துறையில் பேராசிரியராக பணியாற்றும் ஜெகதீஷ் மேற்பார்வையில் செயல்பட்டு வருகிறது.

இந்த ஆய்வகத்தில் நேற்று 4 ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டு வந்தனர். மதியம் திடீரென்று ஆய்வகத்தில் ஏதோ வெடித்தது போன்று சத்தம் கேட்டது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் அங்கு சென்று பார்வையிட்டனர்.

அப்போது, ஒருவர் 20 அடி தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்து இறந்து கிடந்தார். மேலும் 3 பேர் படுகாயமடைந்து உயிருக்கு போராடினார்கள். இதையடுத்து அவர்கள் மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இதுகுறித்து அறிந்தவுடன் சதாசிவநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள். மேலும் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

முதற்கட்டமாக போலீசார் நடத்திய விசாரணையில் ஆராய்ச்சியாளரான மனோஜ் (வயது 30) என்பவர் இறந்ததும், அதுல்யா, நரேஷ் குமார், கார்த்திக் ஆகியோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதும் தெரியவந்தது. இருப்பினும் ஆய்வகத்தில் எப்படி வெடிவிபத்து நிகழ்ந்தது? என்பது தெரியவில்லை. ஆனாலும் ஆய்வகத்தில் உள்ள ஹைட்ரஜன், ஆக்சிஜன், நைட்ரஜன், ஹீலியம் போன்ற கியாஸ் சிலிண்டர்களில் ஏதேனும் ஒரு சிலிண்டர் வெடித்து விபத்து நிகழ்ந்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து சதாசிவநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதுகுறித்து உதவி போலீஸ் கமிஷனர் நிரஞ்சன்ராஜ் அர்ஸ் கூறுகையில், ‘இந்திய அறிவியல் கழகமும், தனியார் நிறுவனமும் சேர்ந்து நடத்தும் ஆய்வகத்தில் வெடிவிபத்து நிகழ்ந்துள்ளது. வெடிவிபத்துக்கான சரியான காரணம் தெரியவில்லை. கியாஸ் சிலிண்டர் வெடித்திருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். ஆய்வகத்தில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்கிறார்கள். இந்த ஆய்வின் முடிவில் தான் வெடிவிபத்துக்கான சரியான காரணம் தெரியும்’ என்றார். இந்த சம்பவம் நேற்று இந்திய ஆய்வு கழகத்தில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. #Scientist #Explosion #IndianInstituteScience
Tags:    

Similar News