செய்திகள்
கோப்புப்படம்

17-ந்தேதி முதல் 2 தனியார் ரெயில்கள் மீண்டும் ஓடும் - ஐ.ஆர்.சி.டி.சி. அறிவிப்பு

Published On 2020-10-07 21:50 GMT   |   Update On 2020-10-07 21:50 GMT
வருகிற 17-ந்தேதி முதல் 2 தனியார் ரெயில்கள் மீண்டும் ஓடத்தொடங்கும் என்று ஐ.ஆர்.சி.டி.சி. நேற்று அறிவித்தது. அவற்றுக்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டது.
புதுடெல்லி:

நாட்டின் முதலாவது தனியார் கார்ப்பரேட் ரெயில்களை இந்திய ரெயில்வேயின் துணை நிறுவனமான ஐ.ஆர்.சி.டி.சி. இயக்கி வந்தது. லக்னோ-டெல்லி இடையிலும், ஆமதாபாத்-மும்பை இடையிலும் 2 தேஜாஸ் ரெயில்களை ஓராண்டுக்கு முன்பு இயக்கத் தொடங்கியது. இந்த ரெயில்கள், கொரோனா ஊரடங்கு காரணமாக, கடந்த மார்ச் 19-ந்தேதியுடன் நிறுத்தப்பட்டன.

இந்நிலையில், இந்த ரெயில்கள், வருகிற 17-ந்தேதி முதல் மீண்டும் ஓடத்தொடங்கும் என்று ஐ.ஆர்.சி.டி.சி. நேற்று அறிவித்தது. அவற்றுக்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டது.

இதன்படி, முக கவசம் அணிவது கட்டாயம் ஆகும். பயணிகளுக்கு, கிருமிநாசினி, முக கவசம், கையுறைகள் அடங்கிய கொரோனா பாதுகாப்பு பெட்டகம் வழங்கப்படும். ஆரோக்ய சேது செயலியை கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும்.

ரெயிலில் ஒரு இருக்கை விட்டு அடுத்த இருக்கையில் அமர வேண்டும். இருக்கையை மாற்றக்கூடாது. அவ்வப்போது, பெட்டிகள், கழிவறைகள், பயணிகளின் உடைமைகள் மீது கிருமிநாசினி தெளிக்கப்படும்.

ரெயில்கள் தாமதமானால், பயணிகளுக்கு இழப்பீடு அளிக்கப்படும் என்றும் ஐ.ஆர்.சி.டி.சி. அறிவித்துள்ளது.

Similar News