செய்திகள்
ராம்தாஸ் அத்வாலே

‘ஒரு குடும்பம், ஒரு குழந்தை சட்டம்’ அவசியம் தேவை... மசோதாவை பரிந்துரை செய்கிறது இந்திய குடியரசு கட்சி

Published On 2021-09-04 16:04 GMT   |   Update On 2021-09-04 16:04 GMT
ஒரு குடும்பம், ஒரு குழந்தை கொள்கையை பின்பற்றினால் மக்கள் தொகையை குறைக்க முடியும் என மத்திய இணை மந்திரி ராம்தாஸ் அத்வாலே தெரிவித்தார்.
அகமதாபாத்:

குஜராத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மத்திய சமூக நீதித்துறை இணை மந்திரி ராம்தாஸ் அத்வாலே இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நாட்டில் வளர்ச்சியை உறுதி செய்வதற்கு, மக்கள் தொகையை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம் என்றார். 

‘எனது தலைமையிலான இந்திய குடியரசு கட்சி, ‘ஒரு குழந்தை கொள்கையை’ ஆதரிக்கிறது. இந்த கொள்கையை பின்பற்றினால் மக்கள்தொகையை குறைக்க முடியும். இதற்காக ‘ஒரு குடும்பம், ஒரு குழந்தை திட்டத்தை’ உறுதிசெய்யும் சட்ட மசோதாவை கொண்டு வர வேண்டும். பிரதமரை சந்தித்து பாராளுமன்றத்தில் இதற்கான மசோதாவை கொண்டு வர எழுத்துப்பூர்வ கோரிக்கை வைக்கப்படும். கட்சி சார்பில் இதற்கான சட்ட முன்வடிவு பிரதமரிடம் வழங்கப்படும். சட்டத்தை கொண்டு வர முயற்சிப்போம்’ என்று 
அத்வாலே
 தெரிவித்தார்.

இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் வரை மட்டுமே மக்கள் அரசியலமைப்பு மற்றும் மதச்சார்பின்மை பற்றி பேச முடியும் என்று சமீபத்தில் குஜராத் துணை முதல்வர் நிதின் படேல் கூறிய கருத்து குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அத்வாலே, இந்து மக்கள் தொகை குறைய வாய்ப்பில்லை என்றார்.

"இந்து மக்கள் தொகை குறையும் என்ற கேள்வி இருப்பதாக நான் நினைக்கவில்லை. இந்துக்கள் இந்துவாகவும் முஸ்லிம்கள் முஸ்லிம்களாகவும் இருக்கிறார்கள். ஒன்றிரண்டு நபர்கள் மதம் மாறுகிறார்கள். அரசியலமைப்பானது மக்களுக்கு அவர்கள் விரும்பியதைச் செய்வதற்கான உரிமையை அளிக்கிறது. ஆனால் யாரும் யாரையும் மதம் மாறும்படி கட்டாயப்படுத்த முடியாது’ என்று அத்வாலே குறிப்பிட்டார்.

Similar News