கேரளாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேச தொழிலாளர்கள் 27 பேர் கைது
- கைதானவர்களுக்கு கேரளாவில் உதவியவர்களையும் கண்காணித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
- போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள வடக்கு பரவூரில் சட்டவிரோதமாக வெளிநாட்டைச் சேர்ந்த சிலர் தங்கியிருப்பதாக எர்ணாகுளம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் எர்ணாகுளம் போலீசார் மற்றும் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் இணைந்து அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
'ஆபரேசன் கிளீன்' என்ற பெயரில் போலீஸ் ஐ.ஜி. வைபவ் சக்சேனா தலைமையில் நடைபெற்ற இந்த வேட்டையில் வடக்கு பரவூர் பகுதியில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த 27 பேர் சிக்கினர். அவர்கள், இந்திய-வங்கதேச எல்லையில் உள்ள ஆற்றின் ஆழமற்ற பகுதியை கடந்து இந்தியாவுக்குள் வந்ததும், பல்வேறு பகுதிகளுக்குச் சென்று விட்டு தற்போது கேரளாவில் வந்து தங்கி வேலை பார்த்து வருவதும் விசாரணையில் தெரியவந்தது.
இவர்கள் வடபரவூர் அருகே மன்னம் பகுதியைச் சேர்ந்த ஹர்ஷத் ஹொசைன் என்பவர் வீட்டில் வாடகைக்கு வசித்து வந்துள்ளனர். அவர்களது ஆவணங்களை போலீசார் ஆய்வு செய்தபோது, இந்தியாவில் சட்ட விரோதமாக வசிப்பதும், தங்களை இந்திய குடிமக்களாக காட்டிக் கொள்வதும் தெரியவந்தது.
மேலும் அவர்கள் மேற்கு வங்கத்தில் இருந்து புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் என்ற போர்வையில் அவர்கள் பல்வேறு இடங்களில் பணிபுரிந்து வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.
கைதானவர்கள் போலீசாரிடம் கூறும்போது, வங்கதேசத்தில் உள்ள ஏஜண்டுகள் தங்களின் அனைத்து இந்திய ஆவணங்களையும் ஏற்பாடு செய்ததாக தெரிவித்தனர். இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கைதானவர்களுக்கு கேரளாவில் உதவியவர்களையும் கண்காணித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.