இந்தியா

பாராளுமன்றத்தில் முதன்முறையாக பீகார் மாநில பட்ஜெட்டை கேட்கும் வாய்ப்பு கிடைத்தது: கனிமொழி எம்.பி. விமர்சனம்

Published On 2025-02-01 15:52 IST   |   Update On 2025-02-01 15:52:00 IST
  • பட்ஜெட்டில் பீகார் மாநிலம் பயனடையும் வகையில் பல்வேறு திட்டங்கள் அறிவிப்பு.
  • பீகார் மாநில தேர்தலை கருத்தில் கொண்டு பட்ஜெட் அமைந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சனம்.

2025-26-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை பாராளுமன்றத்தில் இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதில் தனிநபர் வருமான வரி உச்சவரம்பு 12 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் என்ற அறிவிப்பு வெளியானது.

அத்துடன் பீகார் மாநிலத்திற்கு பயன் அளிக்கும் வகையில் பல்வேறு அம்சங்கள் பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளன. இதனால் பீகார் மாநில சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

இந்த நிலையில் திமுக பாராளுமன்ற குழு தலைவர் கனிமொழி எம்.பி., முதன்முறையாக பீகார் மாநில பட்ஜெட்டை பாராளுமன்றத்தில் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது என விமர்சனம் செய்துள்ளார்.

இது தொடர்பாக கனிமொழி எம்.பி. தனது எக்ஸ் பக்க பதிவில் கூறியிருப்பதாவது:-

எனது பாராளுமன்ற வாழ்க்கையில், பாராளுமன்றத்தில் முதன்முறையாக பீகார் மாநில பட்ஜெட்டை கேட்கும் வாய்ப்பு பெற்றேன்" எனத் தெரிவித்துள்ளார்.

திமுக மக்களவைக்குழுத் தலைவர் டி. ஆர்.பாலு, "பாஜக கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆட்சி செய்யும் பீகார் அரசுக்கு திட்டங்களை மத்திய அரசு வாரி வழங்கியுள்ளது. டெல்லி தேர்தலை கருத்தில் கொண்டும் பட்ஜெட் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன" என்று தெரிவித்தார்.

திமுக எம்.பி. தயாநிதி மாறன், "இது மிகவும் ஏமாற்றம் தரும் பட்ஜெட். டெல்லிக்கு குறிப்பாக பிப்ரவரி 5-ம் தேதி டெல்லி தேர்தலுக்கு வாக்காளர்களை கவரும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. ரூ. 8-12 லட்ச வருமானத்துக்கு 10% வரி உள்ளது தெரிவித்துவிட்டு ரூ.12 லட்சம் வரையிலான வருமானத்துக்கு வரி விலக்கு அளிக்கப்படும் என்று கூறுவது மிகவும் குழப்பமாக உள்ளது. எனவே, நடுத்தர வர்க்கத்தினருக்கு மீண்டும் ஒரு முறை ஏமாற்றம் தான். பீகாரில் இந்த ஆண்டு தேர்தல் இருப்பதால், பட்ஜெட் பீகாரை நோக்கி மட்டுமே செல்கிறது. தமிழகம் அல்லது வேறு எந்த தென் மாநிலங்கள் பற்றி ஒரு வார்த்தை கூட பட்ஜெட்டில் இல்லை" என்று தெரிவித்தார்.

Tags:    

Similar News