இந்தியா

கேரளாவில் 36 டாக்டர்கள் பணி நீக்கம்: பணிக்கு வராமல் இருந்ததால் நடவடிக்கை

Published On 2024-12-18 05:23 GMT   |   Update On 2024-12-18 05:45 GMT
  • மருத்துவர்களில் பலர், சரியாக பணிக்கு வராமல் தொடர்ந்து விடுப்பில் இருந்து வருகின்றனர்.
  • பணி நீக்கம் செய்யப்பட்ட டாக்டர்கள் பல ஆண்டுகளாக பணிக்கு வராமல் இருந்ததுள்ளனர்.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களில் பலர், சரியாக பணிக்கு வராமல் தொடர்ந்து விடுப்பில் இருந்து வருகின்றனர்.

இது தொடர்பாக மாநில சுகாதாரத்துறைக்கு புகார்கள் வந்தன. அதன் பேரில் பணிக்கு வராமல் இருப்பதற்காக விளக்கத்தை தெரிவிக்குமாறு சம்பந்தப் பட்டவர்களுக்கு நோட்டீசு அனுப்பப்பட்டது. ஆனால் ஒரு சிலரை தவிர பெரும்பாலானோர் பதிலளிக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் உரிய அனுமதி பெறாமல் பணிக்கு வராமல் இருந்த 36 அரசு டாக்டர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 33 டாக்டர்களை சுகாதாரப்பணிகள் இயக்குனரும், 3 டாக்டர்களை மருத்துவக் கல்வி இயக்குனரும் பணி நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

பணி நீக்கம் செய்யப்பட்ட டாக்டர்கள் அனைவரும் பல ஆண்டுகளாக பணிக்கு வராமல் இருந்தது மட்டுமின்றி, துறை ரீதியாக கேட்கப்பட்ட விளக்கத்திற்கு எந்த பதிலும் அளிக்காமல் இருந்துள்ளனர். இதனால் அவர்கள் மீது இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இவர்கள் தனியார் துறைகளில வேலை கிடைத்து சென்றிருக்கலாம் அல்லது வெளிநாடுகளுக்கு சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஆனால் அவர்கள் அது தொடர்பாக எந்த தகவலும் கொடுக்காமல் இருக்கிறார்கள். துறை வெளியிட்ட காரண நோட்டீசுக்கு பதிலளிக்காத மேலும் 17 டாக்டர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது.

இதேபோன்று மருத்துவக் கல்வி இயக்குனரகத்தின் கீழ் டாக்டர்கள் உள்பட 337 பேர் அனுமதியின்றி பணிக்கு வராமல் இருக்கின்றனர். அவர்களில் 291 பேருக்கு பணிக்கு வராமல் இருப்பதற்காக காரணத்தை கேட்டு நோட்டிசு அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News