மணிப்பூர்: கிளர்ச்சியாளர்களிடம் ஸ்டார் லிங்க் சாதனம்?.. பதறியடித்து பதில் கொடுத்த எலான் மஸ்க்
- கடந்த மாதம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் 6 பேர் கடத்திச் சென்று கொல்லப்பட்டனர்
- எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங் செயற்கைக்கோள் பயங்கரவாதிகளால் பயன்படுத்தப்படுகிறது என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த வருடம் முதல் கலவரமான சூழல் நிலவுகிறது. இட ஒதுக்கீடு தொடர்பாக குக்கி- மெய்தேய் சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக வெடித்தது.
2023 மே மாதம் பெண் ஒருவர் வன்முறை கும்பலால் சாலையில் நிர்வாணமாக ஊர்வலம் நடத்திச் செல்லப்பட்ட வீடியோ வெளியானது நாடுமுழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
240க்கும் அதிகமான மக்கள் இந்த கலவரத்தில் உயிரிழந்தனர். 60,000 பேர் தங்கள் வீடுகளை இழந்து புலம்பெயர்ந்தனர். முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர்.
காவல் நிலையங்கள் சூறையாடப்பட்டு ஆயுதங்கள் களவாடப்பட்டன. இடையில் கலவரம் ஓய்ந்திருந்த நிலையில் இரு சமூகங்களைச் சேர்ந்த ஆயுதக் குழுக்கள் சமீபமாக மீண்டும் தாக்குதல் நடத்தத் தொடங்கியுள்ளது.
கடந்த மாதம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் 6 பேர் கடத்திச் சென்று கொல்லப்பட்டதால் மீண்டும் மக்கள் போராட்டம் வெடித்து.
பதுங்கியிருந்து தாக்கும் கிளர்ச்சியாளர்களைப் பிடிக்க மணிப்பூரில் குவிக்கப்பட்டுள்ள பாதுகாப்புப்படை திணறி வருகிறது.
இந்நிலையில் இம்பால் கிழக்கு மாவட்டத்தின் கெய்ராவ் குனூ பகுதியில் பாதுகாப்புப் படையினர் சமீபத்தில் நடத்திய தேடுதல் வேட்டையில், ஆயுதங்கள், வெடிபொருட்கள் ஆகியவற்றுடன் சில இணையதள சாதனங்களையும் கைப்பற்றினர்.
கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் மற்றும் சாதனங்களின் புகைப்படங்களை இந்திய ராணுவம் பொதுவெளியில் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் கைப்பற்றப்பட்ட தொலைத்தொடர்பு சாதனம் ஒன்றில் ஸ்டார்லிங்க் நிறுவனத்தின் சின்னம் உள்ளதாக எக்ஸ் தள பயனர் ஒருவர் சுட்டிக்காட்டினார்.
இதனைதொடர்ந்தகு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங் செயற்கைக்கோள் பயங்கரவாதிகளால் பயன்படுத்தப்படுகிறது என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் இந்த குற்றச்சாட்டு குறித்து எலான் மஸ்க் தனது எக்ஸ் பக்கத்தில் பதில் அளித்துள்ளார்.
இது பொய்யானது. இந்தியாவின் மேல் ஸ்டார்லிங்கின் செயற்கைக்கோள் அலைக்கற்றைகள் செயல்படாது என்று தெரிவித்து உள்ளார்.
செயற்கைக்கோள் இணையதள சேவையை வழங்கும் ஸ்டார்லிங், இந்தியாவில் இயங்க உரிமம் இல்லாதது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே கிளர்ச்சியாளர்களுக்கு இதுபோன்ற நவீன சாதனங்கள் எங்கிருந்து கிடைக்கிறது என்பது புதிராகவே இருந்து வருகிறது.