ஆதார் கார்டை இலவசமாக புதுப்பிக்கும் காலக்கெடு 2025 ஜூன் 14 வரை நீட்டிப்பு
- ஆதார் கார்டு வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை தங்களது ஆதாரை புதுப்பித்து கொள்ள வேண்டும்
- ஆதாரில் திருத்தம் செய்யும் பணிகளுக்கு ஆதார் மையத்தில் ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
ஆதார் கார்டு, இந்திய மக்களின் அடையாளமாக இருக்கிறது. வங்கி கணக்கு தொடங்குவது முதல் பான் கார்டு, டிரைவிங் லைசென்சு உள்ளிட்ட அரசின் அனைத்து சேவைகளை பெற ஆதார் கார்டு கட்டாயம் ஆகும். எனவே அனைவரும் தற்போது ஆதார் கார்டு வைத்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் ஆதார் கார்டு வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை தங்களது ஆதாரை புதுப்பித்து கொள்ள வேண்டும் என்று ஆதார் ஆணையம் அறிவுறுத்துகிறது. அதற்காக 10 ஆண்டுகள் ஆன பிறகு சம்பந்தப்பட்டவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். அவர்கள் அருகில் உள்ள ஆதார் மையங்களில் புதுப்பிக்கும் பணியினை மேற்கொள்ளலாம். அப்போது புகைப்படங்கள், கைரேகைகளை புதிதாக பதிவு செய்து கொள்ளலாம்.
புதிய ஆதார் பதிவு செய்வது தவிர மற்ற அனைத்து ஆதார் சேவைக்கும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி ஆதாரில் புகைப்படம் மாற்றுவது, கைரேகை-கருவிழி பதிவு செய்வது, முகவரி மாற்றம் செய்வது, பெயர்-பிறந்த தேதி ஆகியவை திருத்தம் செய்வது போன்ற பணிகளுக்கு ஆதார் மையத்தில் ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இந்நிலையில், பொதுமக்களே நேரடியாக ஆதார் இணையதளத்தில் பெயர், முகவரி போன்றவற்றை இந்தாண்டு டிசம்பர் 14 வரை இலவசமாக மாற்றம் செய்யலாம் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.
ஆதாரை இலவசமாக புதுப்பித்துக் கொள்ளும் காலக்கெடு கடந்த 14 ஆம் தேதி முடிவடைந்து. இந்நிலையில், ஆதாரை இலவசமாக புதுப்பித்துக் கொள்ளும் காலக்கெடுவை அடுத்தாண்டு ஜூன் 14 ஆம் தேதி வரை 6 மாத காலத்திற்கு நீட்டித்துள்ளது.
பெயர், பிறந்ததேதி, முகவரி, தொலைப்பேசி எண் போன்றவற்றை பொதுமக்கள் இந்த காலக்கெடுவிற்குள் இலவசமாக மாற்றம் செய்து கொள்ளலாம்.
அதே சமயம் பயோமெட்ரிக் தகவல்களான கைரேகை, கருவிழி, புகைப்படம் போன்றவற்றில் மாற்றம் செய்ய அங்கீகரிக்கப்பட்ட ஆதார் மையங்களில் பணம் கொடுத்து தான் மாற்றம் செய்யமுடியும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.