வீடியோ கேம் பார்த்து கை விரல்களை பிளேடால் சீவிக்கொண்ட 40 மாணவர்கள்
- பிளேடால் சீவிகொள்பவர்களுக்கு 10 ரூபாய் தருவதாக கூறினான்.
- 40 மாணவ-மாணவிகள் கை விரல்களை சீவிக் கொண்டனர்.
அகமதாபாத்:
குஜராத்தில் வீடியோவில் வரும் விளையாட்டை பார்த்து அடிமையான ஒரு பள்ளி மாணவன் அந்த வீடியோ விளையாட்டு போன்று சக மாணவ-மாணவிகளிடம் சவால் விட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
குஜராத்தில் அம்ரேலி மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் 7-வது படித்து வரும் மாணவன் எப்போதும் வீடியோ விளையாட்டுகளில் மூழ்கி இருந்தான். கை விரல்களை வெட்டி கொள்ளும் வீடியோ விளையாட்டு ஒன்றை பார்த்து அவன் அதேபோன்று பள்ளியிலும் விளையாட முடிவு செய்தான்.
கடந்த வாரம் அவன் சக மாணவர்களிடம் அந்த வீடியோ கேம் விளையாட்டை காண்பித்து கைவிரல்களை பிளேடால் சீவிகொள்பவர்களுக்கு 10 ரூபாய் தருவதாக கூறினான். இந்த சவாலில் வெற்றி பெறவிட்டால் தனக்கு 5 ரூபாய் தந்துவிட வேண்டும் என்று அவன் பந்தயம் கட்டினான்.
அவனது வீடியோ சவால் விளையாட்டை ஏற்று அவனுடன் படிக்கும் 40 மாணவ-மாணவிகள் பிளேடை எடுத்து கை விரல்களை சீவிக் கொண்டனர்.
இதைக் கண்டு வகுப்பு ஆசிரியை கடும் அதிர்ச்சி அடைந்தார். இது வெளியில் தெரிந்தால் சர்ச்சையாகி விடும் என்று அவர் மாணவர்களை அதட்டி யாரிடமும் சொல்லக்கூடாது என்று மறைத்துவிட்டார்.
என்றாலும், கடந்த 21-ந் தேதி சமூக வலைதளம் மூலம் இந்த தகவல் பரவியது. 40 மாணவ-மாணவிகள் கைவிரல்களை வெட்டி கொள்ளும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வைரலானது.
இதையடுத்து போலீசார் அந்த பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். வீடியோ கேமில் அடிமை யாகி இருந்த அந்த 7-ம் வகுப்பு மாணவனை அழைத்து கவுன்சிலிங் கொடுக்க தொடங்கி உள்ளனர்.