மருதமலை பட பாணியில் சிக்னலில் பிச்சை எடுத்தவர் அதிரடியாக கைது
- மத்திய பிரதேசத்தில் பிச்சை எடுப்பதும், பிச்சை போடுவதும் தடை செய்யப்பட்டுள்ளது.
- அரசின் உத்தரவை மீறி பிச்சை எடுத்தால் 1 ஆண்டுவரை சிறை தண்டனை விதிக்கப்படும்.
மத்திய பிரதேச மாநிலத்தை பிச்சைக்காரர்கள் இல்லாத நகரமாக மாற்ற அரசு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அவ்வகையில் மத்திய பிரதேசத்தில் பிச்சை எடுப்பதும், பிச்சை போடுவதும் தடை செய்யப்பட்டுள்ளது.
பிச்சை எடுப்பதற்கான தடையை மீறுவோர் மீது பாரதிய நியாய் சன்ஹிதா சட்டத்தின் 223-வது பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் ஒரு வருடம் வரை சிறை தண்டனையும், 5,000 ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில், மத்தியபிரதேச மாநில தலைநகர் போபாலில் சாலை சிக்னலில் பிச்சை எடுத்த நபரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
பிச்சை எடுத்தவரிடம் மாற்று வேலை தருவதாகவும் பிச்சை எடுப்பதை கைவிடுமாறும் போலீசார் தெரிவித்துள்ளனர். அதனை அவர் ஏற்காததால் பிச்சைக்காரர்கள் தடுப்பு சட்டத்தில் அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.