ராணுவத்துக்கு எதிரான கருத்து: ராகுல்காந்தி நேரில் ஆஜராக சம்மன்
- ராகுல்காந்திக்கு எதிராக வழக்கு.
- இந்திய ராணுவத்தை இழிவுபடுத்துவதாக உள்ளது.
லக்னோ:
ராகுல் காந்தி கடந்த 2022-ம் ஆண்டு கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டார்.
இந்த நடை பயணத்தின் போது 2022-ம் ஆண்டு டிசம்பர் 9-ந்தேதி நிருபர்களை சந்தித்த ராகுல் காந்தி, எல்லையில் 2,000 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்துவிட்டது, அருணாச்சல பிரதேச எல்லைக்குள் ஊடுருவி சீனா தாக்குதல் நடத்துகிறது என்பது உள்ளிட்ட கருத்துகளை தெரிவித்து இருந்தார். அவரது இந்த கருத்துக்கு அப்போதே ராணுவம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள எம்.பி.- எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு கோர்ட்டில் ராகுல்காந்திக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.
எல்லை சாலைகள் அமைப்பின் முன்னாள் இயக்குனர் சங்கர் ஸ்ரீவத்சவா இந்த வழக்கை தொடர்ந்து இருந்தார். அதில், ராகுல் காந்தியின் விமர்சனம் இந்திய ராணுவத்தை இழிவுபடுத்துவதாக உள்ளது என்று சுட்டிக்காட்டி இருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த லக்னோ கோர்ட்டு மார்ச் 24-ந் தேதி ராகுல் காந்தி நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.