ஆந்திராவில் பெண்களுக்கு Work from Home திட்டம்- சந்திரபாபு நாயுடு
- பெண்களின் சாதனைகளைப் பாராட்டுகிறோம்.
- பெண்கள் தொழிலாளர்களின் பங்களிப்பை பெரிதும் அதிகரிக்கும்.
ஐதராபாத்:
பெண்களின் வேலை மற்றும் வாழ்க்கையை மேம்படுத்தவும், வேலை வாய்ப்புகளை அதிகரிக்கவும் ஆந்திரப்பிரதேச அரசு பெண்களுக்கு குறிப்பாக `வீட்டில் இருந்து வேலை' திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
தகவல் தொழில்நுட்பம் மற்றும் உலகளாவிய திறன் மையங்கள் கொள்கையின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஆந்திரப்பிரதேச முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு இந்த புதிய முயற்சியை தனது லிங்க்ட்இன் பக்கத்தில் வெளியிட்டார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:-
`இன்று, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் பெண்கள் மற்றும் பெண்குழந்தைகளுக்கான சர்வதேச தினம். இந்த துறைகளில் பெண்களின் சாதனைகளைப் பாராட்டுகிறோம். அவர்களுக்கு சமமான வாய்ப்புகள் வழங்குவதற்கு ஆந்திரா முனைப்பாக உள்ளது. வேலை வீட்டில் செய்தல், ஹைப்ரிட் மாதிரிகள் போன்றவை பெண்கள் தொழிலாளர்களின் பங்களிப்பை பெரிதும் அதிகரிக்கும்' என்று தெரிவித்துள்ளார்.
மேலும், பெண்கள் தங்கள் சொந்த ஊர்களில் இருந்தே பணி செய்யும் வகையில், ஒவ்வொரு மாநகரம், நகரம், மண்டலத்தில் COWORKING SPACE எனப்படும் பகிர்ந்து பயன்படுத்தும் வகையில் ஐ.டி. அலுவலகங்கள் அமைக்கவும், கிராமப்புரங்களில் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், ஐ.டி. நிறுவனங்களுக்கு ஊக்குவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.