அரவிந்த் கெஜ்ரிவாலின் கைது சட்ட விரோதம்: பிரதமர் மோடி, அமித் ஷா மன்னிப்பு கேட்ட வேண்டும்- சஞ்சய் சிங்
- அரவிந்த் கெஜ்ரிவால், மணிஷ் சிசோடியா மற்றும் நான் கைது செய்யப்பட்டது சட்ட விரோதம்.
- மூன்று வருடங்களுக்குப் பிறகு ஒரு அனுமதி தேவை என்பதை அவர்கள் உணர்ந்துள்ளனர்.
டெல்லி மாநில முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான கெஜ்ரிவால், மதுபானக் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் உச்சநீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்கியதால் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
டெல்லி சட்மன்ற தேர்தல் அடுத்த மாதம் 5-ந்தேதி நடைபெற இருக்கிறது. இதற்காக தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் மீது பணமோசடி வழக்கு தொடர அமலாக்கத்துறைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்த நிலையில் ஆம் ஆத்மியின் மாநிலங்களவை எம்.பி. யான சஞ்சய் சிங், அரவிந்த் கெஜ்ரிவால் கைது சட்டவிரோதமானது. இதற்கு பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா ஆகியோர் மன்னிப்பு கேட்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
இது தொர்பாக சஞ்சய் சிங் கூறியதாவது:-
மதுபானக் கொள்கை தொடர்பான பண மோசடி முறைகேடு பொய் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. அரவிந்த் கெஜ்ரிவால், மணிஷ் சிசோடியா மற்றும் நான் கைது செய்யப்பட்டது சட்ட விரோதம். மூன்று வருடங்களுக்குப் பிறகு ஒரு அனுமதி தேவை என்பதை அவர்கள் உணர்ந்துள்ளனர். இதன்மூலம் இந்த வழக்கு வேண்டுமென்றே பா.ஜ.க.வால் போடப்பட்டது என்பது தெரிகிறது.
பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா ஆகியோர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட ஆம் ஆத்மி தலைவர்களை சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்.
இவ்வாறு சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார்.
அமலாக்கத்துறை கடந்த ஆண்டு மார்ச் மாதம் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்தது. திகார் சிறையில் அடைக்கப்பட்ட கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் செப்டம்பர் மாதம் ஜாமின் வழங்கியது.
டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேட்டில் ரூ.2800 கோடி ஊழல் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டனர். பின்னர் இருவரும் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். சி.பி.ஐ., அமலாக்கத்துறை இந்த வழக்கை விசாரித்து வருகிறது.
கடந்த நவம்பர் 6-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பில், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி அரசின் முன் அனுமதி பெறாமல் அரசு ஊழியர் ஒருவரை பணமோசடி வழக்கின் கீழ் கைது செய்ய முடியாது என்று தெரிவித்து இருந்தது. இந்த தீர்ப்பின்படி கெஜ்ரிவால் மீது வழக்கு தொடர அனுமதி கோரி துணைநிலை ஆளுநர் வி.கே. சக்சேனாவுக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதியிருந்தது. அவரும் அதற்கு ஒப்புதல் அளித்து இருந்தார்.
இந்த நிலையில் மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் மீது பணமோசடி வழக்கு தொடர அமலாக்கத்துறைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்த நிலையில்தான் சஞ்சய் சிங் பிரதமர் மோடி, அமித் ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.