இந்தியா

சுரேஷ் கோபி

கேரளாவில் இருந்து சுரேஷ் கோபியை மத்திய மந்திரி சபையில் சேர்க்க திட்டம்- தலைவர்கள் ஆலோசனை

Published On 2023-01-04 11:24 IST   |   Update On 2023-01-04 11:24:00 IST
  • 2024-ம் ஆண்டு வர இருக்கும் பாராளுமன்ற தேர்தலை மனதில் கொண்டு பாரதிய ஜனதா தென் மாநிலங்களில் பல முன்னேற்பாடு பணிகளை தொடங்கி உள்ளது.
  • சுரேஷ் கோபிக்கு மத்திய மந்திரி பதவி கொடுத்தால் இப்போது நடக்க உள்ள 9 மாநில சட்டசபை தேர்தல் பிரசாரத்திலும் அவரை பயன்படுத்தி கொள்ள கட்சி தலைமை கருதுகிறது.

திருவனந்தபுரம்:

மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சுரேஷ் கோபி.

சுரேஷ் கோபி, தமிழிலும் பல படங்களில் நடித்துள்ளார். மாநிலம் முழுவதும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். திரையுலகில் இருந்தாலும் இவர் அரசியலிலும் அதிக ஆர்வம் காட்டி வந்தார்.

இதையடுத்து அவருக்கு பாரதிய ஜனதா கட்சி சார்பில் மேல்சபை எம்.பி. பதவி வழங்கப்பட்டது. பாரதிய ஜனதாவில் சேர்ந்த பின்னர் அக்கட்சி சார்பில் அவர் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

அதன்பின்பு, கேரளா சட்டசபை தேர்தலிலும் பாரதிய ஜனதா சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். ஆனாலும் அவர் கணிசமான வாக்குகளை பெற்றிருந்தார்.

இந்நிலையில் 2024-ம் ஆண்டு வர இருக்கும் பாராளுமன்ற தேர்தலை மனதில் கொண்டு பாரதிய ஜனதா தென் மாநிலங்களில் பல முன்னேற்பாடு பணிகளை தொடங்கி உள்ளது.

அதன் ஒரு கட்டமாக கேரளாவில் பாரதிய ஜனதாவுக்கு வலுவான வாக்கு வங்கியை உருவாக்க நடிகர் சுரேஷ் கோபியை பயன்படுத்தி கொள்ள கட்சியின் மூத்த தலைவர்கள் திட்டமிட்டு உள்ளனர். இதன் ஒரு பகுதியாக மத்திய மந்திரி சபையில் நடிகர் சுரேஷ் கோபிக்கு வாய்ப்பு அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சுரேஷ் கோபிக்கு மத்திய மந்திரி பதவி கொடுத்தால் இப்போது நடக்க உள்ள 9 மாநில சட்டசபை தேர்தல் பிரசாரத்திலும் அவரை பயன்படுத்தி கொள்ள கட்சி தலைமை கருதுகிறது.

எனவே அடுத்து வர இருக்கும் மத்திய மந்திரி சபை மாற்றத்தின்போது நடிகர் சுரேஷ் கோபி மத்திய மந்திரியாகலாம் எனக்கூறப்படுகிறது.

மேலும் அடுத்து வர இருக்கும் பாராளுமன்ற தேர்தலின்போது நடிகர் சுரேஷ் கோபியை திருவனந்தபுரம் பாராளுமன்ற தொகுதியில் களம் இறக்கவும் பாரதிய ஜனதா திட்டமிட்டுள்ளது.

இந்த தொகுதியில் இப்போது காங்கிரஸ் கட்சியின் சசி தரூர் எம்.பி.யாக உள்ளார். அடுத்த முறையும் அவர் இத்தொகுதியில் போட்டியிட்டால் அங்கு சுரேஷ் கோபியை களம் இறக்கி வெற்றியை ருசிக்க பாரதிய ஜனதா வியூகம் வகுத்துள்ளது. அதற்கு முன்னேற்பாடாகவே சுரேஷ் கோபிக்கு மத்திய மந்திரி பதவி கொடுக்கவும் ஏற்பாடுகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

Tags:    

Similar News