இந்தியா
போலீஸ் நிலையத்தில் கணவரை புரட்டி எடுத்த குத்துசண்டை வீராங்கனை- வீடியோ வைரல்

போலீஸ் நிலையத்தில் கணவரை புரட்டி எடுத்த குத்துசண்டை வீராங்கனை- வீடியோ வைரல்

Published On 2025-03-26 10:41 IST   |   Update On 2025-03-26 10:41:00 IST
  • தலையை கெட்டியாக பிடித்து கொண்டு கழுத்தில் சரமாரியாக குத்து விட்டார்.
  • விடாமல் அவரை அடித்து உதைத்து புரட்டி எடுத்தார்.

அரியானா மாநிலம், ஹிகார் பகுதியை சேர்ந்தவர் ஸ்வீட்டி பூரா. குத்துச்சண்டை வீராங்கனை. இவரது கணவர் தீபக் ஹூடா. கபடி வீரர்.

தனது கணவர் கூடுதல் வரதட்சணை கேட்டு துன்புறுத்துவதாகவும், தன்னை துஷ்பிரயோகம் செய்வதாக கூறி கோர்ட்டில் விவாகரத்துக்கு மனு தாக்கல் செய்தார்.

மேலும் ஹிகார் போலீசில் கணவர் மீது புகார் செய்தார். இந்த வழக்கு தொடர்பாக விளக்கம் அளிக்க நேற்று முன்தினம் தீபக் ஹூடா தனது குடும்பத்தினருடன் போலீஸ் நிலையத்திற்கு வந்தார்.

போலீசார் அவரிடம் விசாரணை நடத்திக் கொண்டு இருந்தனர். அப்போது ஸ்வீட்டி பூராவும் தனது குடும்பத்தினருடன் போலீஸ் நிலையத்திற்கு வந்தார்.


போலீஸ் நிலையத்தில் இருந்த தனது கணவரை கண்ட ஸ்வீட்டி பூரா திடீரென ஆவேசம் அடைந்தார். தனது கணவரின் தலையை கெட்டியாக பிடித்து கொண்டு கழுத்தில் சரமாரியாக குத்து விட்டார்.

இதில் ஸ்வீட்டியின் கணவர் வலி தாங்க முடியாமல் அலறி துடித்தார். விடாமல் அவரை அடித்து உதைத்து புரட்டி எடுத்தார்.

இதனைக் கண்டு திகைத்துப் போன போலீசார் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஸ்வீட்டியை விலக்கி விட்டனர்.

ஸ்வீட்டி தாக்கியதில் அவருடைய கணவர் கழுத்தில் 3 இடங்களில் காயம் ஏற்பட்டு உள்ளது. ஸ்வீட்டி தனது கணவருக்கு சரமாரியாக குத்து விட்ட வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி பரப்பரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News