மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் - குடியரசு தலைவர் உரையுடன் இன்று துவக்கம்
- பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்ற இருக்கிறார்.
- பிரதமா் நரேந்திர மோடி பதில் அளிப்பாா்.
2025-26 நிதியாண்டுக்கான பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (31-ந்தேதி) தொடங்குகிறது. நடப்பாண்டின் முதல் கூட்டத்தொடா் என்பதால் தொடக்க நாளில் பாராளுமன்ற மக்களவையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு இரு அவை உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றுகிறார்.
இதைத் தொடா்ந்து பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிா்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறாா். 2025-26 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் நாளை (பிப்ரவரி 1) தாக்கல் செய்யப்படுகிறது. நிா்மலா சீதாராமன் தொடா்ந்து 8-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்ற இருக்கிறார்.
மக்களவையில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் மீதான விவாதம் பிப்ரவரி 3, 4 ஆகிய இரு தினங்கள் நடைபெறும். மேல்சபையில் இந்த விவாதம் 3 நாட்கள் நடைபெறவுள்ளது. இந்த விவாதங்களுக்கு பிப்ரவரி 6-ம்தேதி பிரதமா் நரேந்திர மோடி மேல் சபையில் பதில் அளிப்பாா் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இரு கட்டங்களாக நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று துவங்கி 9 அமா்வுகளுடன் பிப்ரவரி 13-ந்தேதி முடிவடைகிறது. இரண்டாம் கட்ட அமா்வு மாா்ச் 10-ந்தேதி துவங்கி ஏப்ரல் 4-ந்தேதி வரை நடைபெறுகிறது. ஒட்டுமொத்த பட்ஜெட் கூட்டத்தொடரில் 27 அமா்வுகள் இடம்பெற உள்ளன.
நாளை (சனிக்கிழமை) தாக்கல் செய்யப்படும் மத்திய நிதிநிலை அறிக்கையில் வருமான வரி சலுகைகள் கிடைக்குமா? என்ற எதிர்பார்க்கப்படுகிறது. வருமான வரி வரம்பு குறித்த எதிர்பார்ப்பு மாத சம்பளம் வாங்குபவர்களிடம் இருக்கிறது. ரூ.10 லட்சம் வரை வருமான வரி விலக்கு கிடைக்க சாத்தியம் இருப்பதாக கூறப்படுகிறது.