ஆதாருடன் வாக்காளர் அட்டை இணைப்பு: அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தும் ஞானேஷ் குமார்
- மகாராஷ்டிராவில் குறிப்பட்ட கால இடைவெளிக்குள் அதிக வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
- மேற்கு வங்க மாநில வாக்காளர் அடையில் உள்ள எபிக் எண், வேறு மாநிலத்தில் உள்ள வாக்காளர் அட்டையிலும் இடம் பெற்றுள்ளது என திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு.
வாக்காளர் பட்டியலில் மோசடி நடைபெற்றுள்ளது. தேர்தலின்போது போலி வாக்காளர்கள் சேர்க்கப்படுகிறார்கள் என பாஜக மீது எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றஞ்சாட்டி வருகின்றன. மகாராஷ்டிரா மாநிலத்தில் குறிப்பிட கால இடைவெளிக்குள் அதிக அளவு வாக்களார்கள் சேர்க்கப்பட்டதாக ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினார்.
மேற்கு வங்கத்தில் உள்ள வாக்காளர் பட்டியலில் இடம் பிடித்துள்ள எபிக் எண், மற்ற மாநிலங்களில் உள்ள வாக்காளர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளது. இதன்மூலம் வாக்காளர்கள் பட்டியலில் மோசடி நடைபெற்றுள்ளது நிரூபணமாகி உள்ளது என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தெரிவித்திருந்தது.
இந்த தவறு கடந்த 2000ஆம் ஆண்டில் இருந்து உள்ளது. இன்னும் 3 மாதங்களில் இது சரிசெய்யப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில்தான் இதுபோன்ற குறைபாட்டை தவிர்க்க ஆதார் எண்ணுடன் வாக்காளர் அட்டையை இணைப்பது தொடர்பாக மத்திய உயர் அதிகாரிளுடன் ஆலோசனை நடத்த இந்திய தேர்தல் ஆணைய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் முடிவு செய்துள்ளார்.
இது தெடர்பான கூட்டம் வருகிற செவ்வாய்க்கிழமை நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கூட்டத்தில் உள்துறை செயலாளர், சட்டமன் செயலாளர் மற்றும் UIDAI சிஇஓ ஆகியோர் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
இந்த கூட்டத்தில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைப்பது தொடர்பாக நடைமுறை சாத்தியங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது.
ஏற்கனவே, தானாகவே முன்வந்து ஆதார் எண்ணுடன் வாக்காளர் அட்டையை இணைக்க சட்டம் அனுமதிக்கிறது. காலப்போக்கில் இது இணைக்கப்படும். இதற்கென காலக்கெடு நிர்ணயிக்கப்படவில்லை. ஆதார் எண்ணுடன் இணைக்கப்படவில்லை என்றால் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கம் செய்யப்படாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.